
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி ஆக அறிவிக்கப்பட்டு விட்டதால், அவருக்கு இரண்டில் ஒரு வகை தண்டனை விதிக்கப்படலாம்.
முதலாவதாக, அவருக்கு நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆறு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். இதற்கு 1971-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டம் வகை செய்கிறது.
இந்த சட்டத்திலேயே, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர், மன்னிப்பு கோர விருப்பம் தெரிவித்து அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அவரை மன்னிக்கவும் வாய்ப்பு உள்ளது.
முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர்கள் என். ராம், அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
பிரச்சனை என்ன?
இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தகுதி அடிப்படையில் விசாரிக்க ஒப்புக் கொண்ட நீதிமன்றம், பின்னர் அதை தாமாக விசாரணைக்கு ஏற்க முடிவு செய்தது.
அதன் மீதான உத்தரவில், முதலில் பார்க்கும்போது, பிரசாந்த் பூஷணின் கருத்துகள், நீதித்துறைக்கு அவமதிப்பையும், உச்ச நீதிமன்றம் மீது, தலைமை நீதிபதி அலுவலகம் மீதான பொதுமக்கள் கொண்டுள்ள மரியாதையைக் குலைக்கும் வகையில் இருப்பதாகவும், அது தலைமை நீதிபதியை பாதிக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் பிரசாந்த் பூஷண் எதிர்கொண்டிருக்கவில்லை.
2009-ஆம் ஆண்டில் டெஹெல்கா இதழுக்கு அளித்த நேர்காணலின்போது இந்தியாவில் தலைமை நீதிபதிகளாக இருந்த 16 பேரில் பாதி பேர் ஊழல்வாதிகள் என்று அவர் குற்றம்சாட்டி சர்ச்சையில் சிக்கினார்.
2010-ஆம் ஆண்டு, நவம்பர் 10-ஆம் தேதி அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, "நீதிபதிகள் ஊழல்வாதிகளாக அழைக்கப்படுகிறார்களோ இல்லையோ இது விசாரிக்க உகந்த விவகாரம்" என்று கூறியது.
கடந்த 10 ஆண்டுகளில் அந்த வழக்கு வெறும் 17 முறை மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரத்தில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவிப்பதாக எழுத்துப்பூர்வமாக பிரசாந்த் பூஷண் தெரிவித்தபோதும், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த வழக்கின் விசாரணை வரும் 17-ஆம் தேதி நடத்தப்படும் என்று நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்துக்கும் நீதிமன்ற அவமதிப்புக்கும் இடையே மெல்லிய கோடு மட்டுமே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது. அந்த கருத்துச் சுதந்திரத்தைச் சமன்படுத்த விரும்புவதாகக் கூறிய நீதிபதிகள் அதே சமயம், நீதித்துறையில் உள்ள நீதிபதிகளின் மதிப்பையும் பாதுகாக்கும் அவசியம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விமர்சனம் Vs நீதிமன்ற அவமதிப்பு
கருத்துச் சுதந்திரமும் அரசியலமைப்பின் 129-ஆவது பிரிவும் நேருக்கு நேர் வரும்போது மோதல் ஏற்படுவதாகச் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தவோ ஒரு விஷயம் மீதான தனது பார்வையை வெளிப்படுத்தவோ சுதந்திரம் உண்டு. ஆனால்,
ஆனால் அந்த கருத்து வெளிப்பாடு, நீதிமன்றம் பற்றியதாக இருந்தால், அரசியலமைப்பின் 129ஆது பிரிவை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிமன்ற அவமதிப்பு குறித்து இந்திய நீதித்துறை வட்டாரங்களில் எப்போதும் ஒரு விவாதம் நடந்து வருகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியா இருந்து ஓய்வு பெற்ற ஏ.பி. ஷா கூறுகையில், உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக வலுவான ஜனநாயக நாடுகளிலும் அவமதிப்பு சட்டம் வழக்கற்று வருகிறது. உதாரணமாக, நீதிமன்றங்களின் முடிவுகள் குறித்து அமெரிக்காவில் கருத்து தெரிவிப்பது பொதுவானது, அவை அவமதிப்புக்குள்ளாகாது என்று கூறுகிறார்.
ஆனால் கடுமையான சட்டம் இல்லை என்றால் நீதிமன்றங்களுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள் என்று முன்னாள் தலைமை நீதிபதி பிரமோத் கோஹ்லி கூறுகிறார். சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் சட்டமன்றம் தன்னிச்சையாக இருப்பதைத் தடுக்க ஒரே ஒரு வழி இருக்கிறது என்றால் அதுதான் நீதித்துறை என்று அவர் தெரிவிக்கிறார்.
நீதிமன்ற அவமதிப்பு சட்டம் எப்போது அமலானது?
மே 27, 1949-ஆம் ஆண்டு முதன்முதலில் அரசியலமைப்பு நிர்ணய சபையில் 108-வது பிரிவாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒப்புக் கொள்ளப்பட்டதும், அது பிரிவு 129 ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்த பிரிவில் இரண்டு முக்கிய விஷயங்கள் எழுந்தன. முதலில் உச்ச நீதிமன்றம் எங்கு அமைய வேண்டும் என்பதும், இரண்டாவதாக, எது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதும் ஆராயப்பட்டன. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக் குழுவின் தலைவராக பீம் ராவ் அம்பேத்கர் இருந்தார்.
அந்தக்குழுவின் விவாதத்தின்போது, அரசியலமைப்பு நிர்ணய சபையின் சில உறுப்பினர்கள், அவமதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது அதன் விவரங்களை விளக்கிய அம்பேத்கர், இந்த அரசியலமைப்பு பிரிவு தன்னிச்சையாக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை விசாரிக்கலாம் என்பதால் அது அவசியமாகிறது என்று நியாயப்படுத்தினார்.
ஆனால் அந்த பிரிவை நீதிபதிகள் நியாயமாகப் பயன்படுத்துவார்கள் என்று கருதுவது பொருத்தமானதல்ல என்று உறுப்பினர்களில் ஒருவரான ஆர்.கே.சித்வா கூறியிருந்தார்.
தொழில்முறை வழக்கறிஞர்களாக உள்ள அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ஆதரிக்கிறார்கள், அதே நேரத்தில் நீதிபதிகளும் மனிதர்கள்தான். அவர்களும் தவறுகளைச் செய்யலாம் என்பதை உறுப்பினர்கள் மறந்து விடுகிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆனாலும், கருத்தொற்றுமை எட்டப்பட்டதால், அரசியலைப்பின் 129-ஆவது பிரிவு நடைமுறைக்கு வந்தது.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment