
வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதியின் பெயரால் பட்டியலின
மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை
செய்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி எந்தெந்த செயல்கள் குற்றங்களாக
கருதப்படுகின்றன? குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து இந்த
தொகுப்பில் காணலாம்...
தீண்டாமை
ஒழிப்புச் சட்டம் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 1976ம் ஆண்டு புதிதாக சில
விதிகளை சேர்த்த மத்திய அரசு, குடியுரிமை பாதுகாப்புச் சட்டமாக
உருமாற்றியது. 1989 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்
மீதான வன்முறை தடுப்புச் சட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு
அம்சங்களுடன் திருத்தப்பட்ட இந்த சட்டமானது, 1995 ஆம் ஆண்டுதான்
நடைமுறைக்கு வந்தது.
2018 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தீர்ப்பு
வழங்கிய உச்சநீதிமன்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு
திருத்தங்களை அறிவித்தது. உச்சநீதிமன்றம் அறிவித்த திருத்தங்கள் சட்டத்தின்
நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும்
எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து வன்கொடுமைக்கு எதிரான தண்டனைகளை
கடுமையாக்கி, புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு
.பட்டியல் சமுதாயத்திற்கு எதிரான வன்கொடுமைகளாக நீண்ட பட்டியல் ஒன்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றங்களில்
ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க புதிய சட்டத்திருத்தம் வகை
செய்கிறது. அதன்படி வன்கொடுமை வழக்குகளை இரண்டு மாதத்திற்குள்
நீதிமன்றங்கள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில்
மேல்முறையீட்டுக்குப் போனால் மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட
வேண்டும் என்றும் புதிய சட்டம் வலியுறுத்துகிறது. அரசு ஊழியர்கள் பட்டியல்
சமுதாய மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்தால் ஆறு மாதம் முதல்
ஒரு வருடம் வரை தண்டனை கிடைக்கும் என்றும் பட்டியல் சமுதாய மக்களுக்கு
எதிரான வன்கொடுமைகளுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து வருடம் வரை சிறைதண்டனை
வழங்கவும் புதிய சட்டம் வகை செய்கிறது. முக்கியமாக, குற்றம்சாட்டப்பட்ட
நபர் அரசியலமைப்புச் சட்டத்தின் 438வது பிரிவின் கீழ் முன்பிணை பெற இயலாது
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment