
வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
எஸ்.கே.வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி இன்று மீண்டும் தாய் வீடான
திமுகவில் இணைந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த
வேதரத்தினம் தொடர்ந்து 4 முறை வேதாரண்யம் திமுகவின் ஒன்றியச் செயலாளராக
இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று பேரவைத் தேர்தல்களில் திமுக
சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ந்து, 15 ஆண்டுகள் சட்டப்பேரவை
உறுப்பினராக இருந்தவர்.
கடந்த 2011-ம்
ஆண்டு நடந்த தேர்தலில் இவரை ஓரம் கட்ட வேலைகள் நடைபெற்றன. மக்கள்
செல்வாக்குள்ள இவருக்கு சீட் தரக்கூடாது என்பதற்காகவே தொகுதி பாமகவுக்குத்
தாரை வார்க்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியில்
இருந்து வெளியேறினார்.
அந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 22,625
வாக்குகளைப் பெற்று 2-வது இடம் பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட
சின்னதுரை தோல்வி அடைந்தார். அதிமுக வென்றது.
அதன்பின்னர் அவரை பாஜக
அரவணைத்தது. 2015-ம் ஆண்டு பொன்.ராதாகிருஷ்ணன் அவரை பாஜகவுக்குக் கொண்டு
வந்தார். வந்தவருக்கு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில்
போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இந்த தேர்தலில் வேதரத்தினத்துக்காகப்
பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடியே வேதாரண்யம் வந்திருந்தார். ஆனால் அந்தத்
தேர்தலிலும் தோல்வியே கிட்டியது. ஆனாலும் 37,086 வாக்குகள் கிடைத்தன. இந்த
நிலையில் வேதரத்தினத்துக்குக் கட்சிப் பதவி கிட்டியது. மாநில செயலாளராகப்
பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூலை 5-ம் தேதியன்று பாஜகவுக்குப்
புதிதாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் அவருக்கு மாநிலப் பொதுச்
செயலாளர் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த
முக்கியத்துவமும் இல்லாத தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி
அறிவிக்கப்பட்டது. அதனால் தான் ஓரம் கட்டப்படுகிறோம் என்ற அதிருப்தியில்
இருந்து வந்தவரை, சமயம் பார்த்து திமுக தரப்பு அணுகியது.
ஸ்டாலினிடம் அலைபேசியில் பேசி இருக்கிறார் வேதரத்தினம். வந்துடுங்க பார்த்துக்கலாம் என்று ஸ்டாலின் அழைத்திருக்கிறார்.
அதனையடுத்து
எஸ்.கே.வேதரத்தினம் இன்று பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில்
இணைந்தார். மாலை 4 மணியளவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து
காணொலிக் காட்சி முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னைத்
திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு மாவட்டச் செயலாளர் கவுதமன்,
ஸ்டாலின் சார்பில் சால்வை அணிவித்துக் கட்சிக்குள் வரவேற்றார். பின்னர்
அனைவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
No comments:
Post a Comment