குழந்தைகளை வைத்து தன் அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூக
ஊடகங்களில் வெளியிட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த
சமூகச் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவை கேரள உயர் நீதிமன்றம் விளாசியது.
அவரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.
கடந்த மாதம் ரெஹானா
பாத்திமா தன் மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய
வைத்து, 'உடல் மற்றும் அரசியல்' என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டார்.
முகநூலில் வீடியோவையும், புகைப்படங்களையும பதிவிட்டு, சர்ச்சைக்குரிய
வகையில் ஆண், பெண் உடல் குறித்த கருத்துகளையும் ரெஹானா பாத்திமா
பதிவிட்டிருந்தார்.
ஏற்கெனவே
சர்ச்சைகளுக்குப் பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட வீடியோவும் கேரள
மாநிலத்தில் வைரலானது, எதிர்ப்பும் கிளம்பியது.
தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு
ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என்று பல்வேறு
அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
பத்தனம்திட்டா மாவட்ட பாஜக
தலைவர் ஏ.வி.அருண் பிரகாஷ் திருவல்லா போலீஸில், ரெஹானா பாத்திமாவின்
சர்ச்சைக்குரிய வீடியோவைக் காண்பித்து அவர் மீது தகவல் தொழில்நுட்பச்
சட்டத்திலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமான போக்சோ சட்டத்தின்
கீழும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

மேலும்,
இந்த விவகாரத்தை மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து
வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து,ரெஹானா பாத்திமா மீது போக்சோ
சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின்
கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில்
முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்திருந்தார். இந்த மனுவில் தான் செய்த செயலை நியாயப்படுத்தியும், தனது
குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவே தனது உடலில் படம்
வரையவைத்து உணர்த்தினேன் என்றும் கூறியிருந்தார். மேலும், குழந்தைகளுக்குப்
பாலியல் கல்வி என்பதும், உடல் மீதான புரிதலும் அவசியம் என்று
குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன்
அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அமர்வில் ரெஹானா
பாத்திமா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'மனுதாரர் தனது குழந்தைகளுக்குப்
பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்கத்தான் இவ்வாறு செய்தார்' எனத்
தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி உன்னிகிருஷ்ணன் கடுமையாகப்
பேசுகையில், 'மனுதாரர் ரெஹானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரின்
கொள்கையின்படி, சித்தாந்தப்படி அவரின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க உரிமை
இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் 4 சுவர்களுக்குள் அவரின் வீட்டுக்குள்
இருந்திருக்க வேண்டும். சட்டத்தால் அதைத் தடை செய்ய முயலக்கூடாது.

மனுஸ்மிருதி,
புனித குர்ஆன் நூல்களைப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள். அதில்
குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது விளக்கமாகச்
சொல்லப்பட்டிருக்கும்.
தனது குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி
கற்றுக்கொடுக்க வேண்டும் என மனுதாரர் நினைத்துள்ளார். அந்த நோக்கத்துக்காக
அவரின் அரை நிர்வாண உடலில் அவரின் குழந்தைகளை வைத்தே ஓவியம் வரையவைத்து,
அதை சமூக ஊடங்களில் பதிவேற்றமும் செய்துள்ளார்.
மனுதாரர் தனது
குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் எனும்
வாதங்களையும், விளக்கத்தையும் கேட்கும் நிலையில் இல்லை'' எனக் கூறி மனுவைத்
தள்ளுபடி செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்
தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடி கட்டி நுழைய முயன்று
சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment