
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 25-ம் தேதி
மத்திய அரசு கொண்டு வந்த நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம்
தேதியோடு முடிகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து
வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவலை இன்னும்
முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் இருப்பதால் ஊரடங்கு தடையை
நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ஏராளமான மாநில அரசுகளும்,
மருத்துவ வல்லுநர்களும், தொற்றுநோய் நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளனர் எனத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதலால்,
ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள்
அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும்,
தடுக்கவும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு
கொண்டு வந்தது. ஊரடங்கு நாட்களில் மக்கள் வெளியே நடமாடவும், சமூக விலகலைக்
கடைப்பிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. மீறுவோர் மீது சட்டப்படி
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 14-ம்
தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆனால், இந்தியாவில் கரோனா வைரஸ்
பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறதே தவிர குறையவில்லை.
இந்த சூழலில் வரும் 14-ம் தேதி எந்த அடிப்படையில் மத்திய அரசு ஊரடங்கு
உத்தரவைத் தளர்த்தும் என்பது கேள்வியாக இருக்கிறது.
இந்த
ஊரடங்கு உத்தரவு, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சமீபத்தில்
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்
சிங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப்
முகர்ஜி, பிரதீபா பாட்டீல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்,
அகிலேஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுடன்
தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், மாநில முதல்வர்களுடனும்
காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சூழலில் மத்திய
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரின் இல்லத்தில்
முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக்
கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல்,
நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள்
பங்கேற்று ஊரடங்கு உத்தரவு குறித்து ஆலோசித்துள்ளனர். ஆனால், எந்த முடிவும்
எடுக்கப்படவில்லை. .
தற்போது மத்திய அரசு முன் இரு முக்கிய
வாய்ப்புகள் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்வதா, அல்லது
வாழ்வதாரத்தைத் தியாகம் செய்வதா என்பதாகும்.
அதேசமயம் விளிம்பு நிலை
மக்கள், ஏழைகள், கூலித்தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள்
ஆகியோரின் வாழ்வாதாரத்தையும், நடுத்தர குடும்பத்தினர், மாத ஊதியம் பெறுவோர்
ஆகியோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு
தளர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுகிறது.
ஆனால், மத்திய
அரசிடம் கருத்துத் தெரிவித்த பெரும்பலான மாநில அரசுகள் கரோனா வைரஸ்
நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் வராததால் கூடுதலாக இரு வாரங்கள்
லாக்-டவுனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. தெலங்கானா
முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் பிரதமர் மோடியிடம் இதே கருத்தை
வலியுறுத்தியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும்,
மக்களின் வாழ்வாதாரத்தைத் திருப்பிக்கொண்டு வந்துவிடலாம். உயிர் போனால்
வராது என்று லாக்-டவுன் நீட்டிப்பு குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
மேலும்,
பாமக எம்பி அன்புமணியும் லாக்-டவுனை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க பிரதமர்
மோடியிடம் வலியுறுத்தினேன் எனத் தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அரசின் முக்கிய அதிகாரி
ஒருவர் கூறுகையில், 'கரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால்
லாக்-டவுனை நீட்டிக்க பெரும்பாலான அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதே
கருத்தைத்தான் மருத்துவ வல்லுநர்களும், தொற்றுநோய் நிபுணர்களும் மத்திய
அரசுக்கு எச்சரிக்கையாக விடுத்துள்ளார்கள். ஆதலால், லாக்-டவுனை
நீட்டிக்கும் முடிவை நோக்கித்தான் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' எனத்
தெரிவித்தார்.
பிரதமர் மோடி நேற்று பேசுகையில், 'கரோனா வைரஸுக்கு
எதிராக நீண்ட போருக்கு மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
தோற்றுவிடுவோம் என மக்கள் சோர்வடைந்துவிடக்கூடாது. இந்தப் போரில் நிச்சயம்
நாம் வெல்வோம் என நம்பிக்கையிருக்கிறது' எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment