முதல்வர் எடப்பாடி உத்தரவின் அடிப்படையில் பேட்டி அளிக்காமல்
மருத்துவமனை ஆய்வுக்கு சென்றதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பேட்டி
அளித்து வந்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அச்சம் தொடங்கிய காலத்தில் தமிழகத்தில் கொரோனா வரவே வராது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்து வந்தார். பாதிப்பு பரவியதும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து கொரோனாவை ஒழித்துவிட்டது போல பில்ட்அப் கொடுத்தார். அனைத்துக்கும் மேலாக இது விஜயபாஸ்கர் மாநிலம் என்று கொரோனா பயந்து ஓடும் வகையில் அவரது ஐடி விங் நபர்கள் வீடியோ வெளியிட்டனர்.
இதனால் கடுப்பான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கர் பேட்டி அளிக்க தடைவிதித்தார். ஆளுநர் உடனான சந்திப்பின்போது விஜயபாஸ்கர் ஒதுக்கப்பட்டார். சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பீலாதான் சுகாதாரத் துறை அமைச்சர் போல பேட்டி அளிப்பது போன்றவற்றை மேற்கொண்டார். விஜயபாஸ்கர் ஒதுக்கிவைக்கப்பட்டது பட்டவர்த்தனமாக தொிந்தது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என பலரும் விஜயபாஸ்கர் பற்றித் தொடர்ந்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று மீண்டும் விஜயபாஸ்கர் நீண்ட பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அண்மைக் காலமாக நீங்கள் பேட்டி அளிக்காமல் இருந்தது ஏன் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "முதலமைச்சரின் உத்தரவின்படி நான் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறேன்.
முதலமைச்சர்
உத்தரவு படி சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து வந்தார்.
அவ்வப்போது தலைமைச் செயலாளாரும், முதல்வரும் கூட செய்தியாளர்களை
சந்திக்கின்றனர். மற்றபடி நீங்கள் நினைக்கும் அளவுக்கு எந்த ஒரு அரசியல்
உள்நோக்கமும் இல்லை" என்றார்.
முதலமைச்சர்தான் சுகாதாரத் துறை செயலாளரை பேட்டி அளிக்கும்படி உத்தரவிட்டார் என்று விஜயபாஸ்கர் கூறியதன் மூலம் இதுவரை நீடித்து வந்த மோதல் வெளிப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் இடையே இருந்துவந்த பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment