சிஏஏ போராட்டம் குறித்து திருப்பூர் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டதை தமிழகம் முழுதும் போலீஸார் அமல்படுத்த முயற்சிப்பதாக
வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதி அமர்வில் முறையிட்டதை அடுத்து நாளை மீண்டும்
வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளது.
அனுமதி இல்லாமல்
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் எந்த
போராட்டமும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய திரூப்பூர் காவல்துறைக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியுரிமை
திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து
வரும் நிலையில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15-ம்
தேதி முதல் நடத்தும் போராட்டத்தை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த போராட்டம் காரணமாக பள்ளிக் குழந்தைகள், பொது மக்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு
முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
' திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும்,
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார். ஆனாலும், போராட்டங்கள் தொடர்ந்து
வருவதாகவும் அப்போது குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள்,
வழக்கு பதிவு செய்யப்பட்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகு,
அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினருக்கு எந்த
தடையும் இல்லை எனத் தெரிவித்தனர். சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்த
நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே
வழக்குப்பதிவு செய்யப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அனுமதிக்கப்படாத ஒரு
இடத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் போராட்டம் நடத்த எவருக்கும்
உரிமையில்லை எனத் தெரிவித்தனர்.
போராட்டம் நடைபெறும் சாலையில்
பள்ளி, மருத்துவமனைகள் அமைந்துள்ளதாகவும், இந்த போராட்டம் பொதுமக்களுக்கு
இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதால், திருப்பூரில் குடியுரிமை திருத்த
சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள்
நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
திருப்பூர் காவல்துறைக்கு பிறப்பித்த உத்தரவு தமிழக
டிஜிபி-க்கு பிறப்பித்த உத்தரவாக கருதி காவல்துறை நடவடிக்கை எடுக்க
தொடங்கியுள்ளதால் சில வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிபதிகள் அறையில்
முறையிட்டனர். அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை ((மார்ச் 6)) வழக்கை மீண்டும்
பட்டியலிடப்படும் என தெரிவித்தனர்.

No comments:
Post a Comment