
ஆர்ப்பாட்டம், போராட்டம், ஆட்டோ உடைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு,
இந்து, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் என்று கடந்த சில
நாள்களாக அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி சம்பவங்களைச் சந்தித்து வருகிறது
கோவை மாநகரம்.

இது எப்படி ஆரம்பித்தது... இதுவரை என்னவெல்லாம் நடந்துள்ளன என்பதை ஒரு டைம்லைன் ரிப்போர்ட்டாக பார்ப்போம்.
பிப்ரவரி 19... கோவை ஷாகீன்பாக்
சி.ஏ.ஏ-வுக்கு
எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வந்த
நிலையில், கோவையிலும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக பல்வேறு தொடர் போராட்டங்களில்
இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 19-ம்
தேதி ஆத்துப்பாலம் பகுதியில் டெல்லி ஷாகீன்பாக் பாணியில் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மார்ச் 1... வாழ்வுரிமை மாநாடு
மனிதநேய
ஜனநாயகக் கட்சி சார்பில், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கொடிசியா மைதானத்தில்
வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்
கலந்துகொண்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மார்ச் 2... இந்து அமைப்புகள் தொடர் போராட்டம்.
இஸ்லாமியர்கள்
அனுமதியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி, இந்து முன்னணி,
பி.ஜே.பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக காந்திபுரம்
தமிழ்நாடு ஹோட்டல் முன்பு தொடர் போராட்டத்தைத் தொடங்கினர்.
முதல் மோதல்!
இந்து
முன்னணி, பி.ஜே.பி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு
உணவகம் அருகே, ஷாகுல் ஹமீது என்ற இஸ்லாமியரை இந்து அமைப்பினர் தாக்கியதாக
புகார் எழுந்தது. அந்த நபர் (ஷாகுல் ஹமீது), போராட்டத்தை வீடியோ
எடுத்ததாகவும், அதுகுறித்து கேட்டதற்கு, `அப்படிதான்டா எடுப்பேன்' என்று
சொல்லியதாகவும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதனிடையே, ஹமீதுக்கு
ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்கள், இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடினர். போலீஸார்
தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு
வந்தனர்.
மார்ச் 4... ஆனந்தன் மீது தாக்குதல்
சி.ஏ.ஏ-வுக்கு
ஆதரவான போராட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்ட, இந்து முன்னணி மதுக்கரை
ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் என்பவரை நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே
மர்மநபர்கள் தாக்கிச் சென்றனர். ஆனந்தன் கோவை அரசு மருத்துவமனையில
அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆட்டோக்கள் உடைப்பு!
ஆனந்தனுக்கு
ஆதரவாக பல்வேறு இந்து அமைப்பினர் அரசு மருத்துவமனை முன்பு ஒன்று கூடினர்.
நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, அரசு மருத்துவமனை
அருகே சென்ற முகமது கனி உட்பட இரண்டு இஸ்லாமியர்களின் ஆட்டோக்களை இந்து
அமைப்பினர் உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்து அமைப்பினர்
தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் காயமடைந்ததாகவும் போலீஸில் புகார்
அளிக்கப்பட்டது.
மார்ச் 5... பள்ளி வாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கணபதி
அருகே பள்ளி வாசல் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர்.
இதனிடையே, ஆனந்தன் மீதான தாக்குதலைக் கண்டித்து, 6-ம் தேதி கடையடைப்புப்
போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்தது. இந்து முன்னணி
அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, அதே தினத்தில் தாங்களும்
கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இஸ்லாமிய கூட்டமைப்பினர்
அறிவித்தனர்.
ஏ.டி.ஜி.பி-க்கள் வருகை
சட்டம்
ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-க்கள் ஜெயந்த் முரளி மற்றும் சங்கர் ஜூவால் கோவை
வந்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள்
ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கடையடைப்பு தேதி மாற்றம்...
6-ம்
தேதி முகூர்த்த நாள் என்பதால், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று கடையடைப்புப்
போராட்டத்தை 7-ம் தேதி மாற்றுவதாக இந்து முன்னணி அறிவித்தது. அதே
காரணத்துக்காக, தாங்களும் கடையடைப்புப் போராட்டத்தை 7-ம் தேதிக்கு
மாற்றுவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. ஆனால், கடைசி நேர அறிவிப்பு
அறியாத சில வணிகர்கள், 6-ம் தேதி கடைகளை அடைத்தனர்.
மார்ச் 7... கடையடைப்பு!
இந்து
மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கடையடைப்புப் போராட்டத்தால் கோவையில்
வணிகம் முற்றிலும் முடங்கியது. நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டது. முக்கியச் சாலைகளில் போலீஸார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
மார்ச் 8... மீண்டும் ஆட்டோ உடைப்பு
ராஜவீதியில்
விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் ஒருவரின் ஆட்டோவை மர்மநபர்கள் உடைத்துச்
சென்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மார்ச் 9... மீண்டும் ஆட்டோ உடைப்பு
செல்வபுரம்
புட்டுவிக்கி அருகே மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் ஆட்டோவை மர்ம
நபர்கள் உடைத்துச் சென்று விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த
காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மார்ச் 10... இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
குனியமுத்தூர்
பகுதியில் பி.ஜே.பி பிரமுகர் ஒருவரின் ஆட்டோவை மர்மநபர்கள் உடைத்துச்
சென்றனர். இந்த நிலையில், காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி
அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுவிட்டனர்.
கைது!
மார்ச்
5-ம் தேதி பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய வழக்கில் விஸ்வ
ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அகில் மற்றும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த
பாண்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
எஸ்.டி.பி.ஐ இக்பால் மீது தாக்குதல்
காட்டூர்
பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் இக்பால் மற்றும்
அவரரின் நண்பர் ஷாஜகான் ஆகியோர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி
மறைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இக்பால் பிறகு
தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போராட்டம்...
இந்து
முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதைக் கண்டித்து, இந்து
முன்னணி சார்பில் 11-ம் தேதி பவர்ஹவுஸில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
என்று அறிவிப்பு. அதேபோல, இக்பால் மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமிய
அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை...
அன்றைய தினம் மாலை இஸ்லாமிய அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மார்ச் 11... அரசு கோரிக்கை!
புதன்கிழமை
காலை இந்து அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அமைதிப்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒருவாரத்துக்கு எந்தப் போராட்டம்,
ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அரசுத்தரப்பில் இருவரிடமும்
கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ரத்து!
அரசுத் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று பவர்ஹவுஸில் நடைபெற இருந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
கைது!
இந்து
முன்னணி பிரமுகர் ஆனந்தன் தாக்கப்பட்ட வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா அமைப்பைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார்.
மீண்டும் தாக்குதல்...
சரி
இனி எந்தப் பிரச்னையும் இருக்காது என்று எல்லோரும் சற்று ஆசுவாசமான
நிலையில், சுந்தராபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் சூரியபிரகாஷ்
என்பவர், மர்மநபர்களால் தாக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட சூர்யபிரகாஷ், பின்னர் தனியார் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டார். இதைக் கண்டித்து, மார்ச் 12 அன்று கண்டனப் பேரணி
நடத்தப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்தன.
ஆட்சியர் எச்சரிக்கை!
"கோவையின்
அமைதிக்கு பங்கம் விளைவித்தாலும், சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம்
செய்து, வன்முறையைத் தூண்டினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக
இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட
ஆட்சியர் ராசாமணி பேட்டி கொடுத்தார்.
போலீஸ் குவிப்பு...
கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பப்பட்டன.
மீண்டும் போராட்டம்...
இந்து
முன்னணி பிரமுகர்கள் தொடர் தாக்குதலுக்குள்ளாவதற்கு காவல்துறையின்
மெத்தனப் போக்கே காரணம் என்பதை கண்டித்து, இந்து முன்னணி, பி.ஜே.பி,
வி.ஹெச்.பி சார்பில் இன்று (மார்ச் 12) மாலையில் அண்ணா சிலை முதல், மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் வரை கண்டனப் பேரணி நடந்தது. முழு போலீஸ் பாதுகாப்புடன்
நடந்த இந்தப் பேரணியில் பி.ஜே.பி., இந்து முன்னணி, வி.ஹெச்.பி. மற்றும்
இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணி அமைதியாக நடந்து முடிந்ததில் போலீஸாரை விட பொதுமக்கள்
பெரிதும் நிம்மதியாகியுள்ளனர்.
இதுகுறித்து
கோவை போலீஸ் துணை ஆணையர் பாலாஜி சரவணனிடம் பேசியபோது, "தனிமனிதர்கள்
யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப
வேண்டாம். பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல், தங்களது பணிகளைத் தொடரலாம்.
எந்தப்
பிரச்னையாக இருந்தாலும், அதற்கு காவல்துறை மூலம் தீர்வு காண்பதே சரியான
வழி. மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான
நடவடிக்கை எடுக்கும்"என்று எச்சரித்துள்ளார்.
காவல்துறையின் எச்சரிக்கையல்ல... பொதுமக்களின் ஒத்துழைப்பே கோவையின் பதற்றத்தைத் தணிக்கும்.
No comments:
Post a Comment