மேற்கு வங்கத்திலுள்ள நதியா எனும் மாவட்டத்தில், பா.ஜ.க-வினர் பேரணி
ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். அதில், மேற்கு வங்கத்தின் பா.ஜ.க தலைவர்
திலிப் கோஷ் கலந்துகொண்டார். பேரணி நடைபெற்ற பாதையின் வழியாக வந்த
ஆம்புலன்ஸுக்கு அவர் வழிவிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக
வலைதளங்களில் வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
``வாகனத்தை
திருப்பச் சொல்லுங்கள். இங்கே இடமில்லை. மக்கள் அனைவரும் இங்கு
அமர்ந்திருக்கிறார்கள். இவ்வழியாகச் சென்றால், அவர்களுக்கு தொந்தரவாக
இருக்கும். நிறைய வழிகள் இருக்கின்றன. வேறு வழியாக செல்லச் சொல்லுங்கள்.
பின்பக்க வாயில்வழியாக செல்லச்சொல்லுங்கள், அங்கு நிறைய இடம் இருக்கிறது"
என்று அவர் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு
வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதும் இதுதொடர்பாக குற்றம் சாட்டியுள்ளார்.
மம்தாவை விமர்சித்துப் பேசிய அவர், ``நிறைய இடங்கள் இருக்கும்போது, ஏன்
ஆம்புலன்ஸ் இவ்வழியாக வருகிறார்கள். நிறைய மக்கள் அமர்ந்திருக்கும்போது
நீங்கள் ஆம்புலன்ஸை அனுப்புகிறீர்கள். எல்லாமே உள்நோக்கத்துடன்
செய்யப்பட்டுள்ளது. சில நாடகங்கள் இங்கே நடைபெறுகின்றன. மம்தா பானர்ஜி ஏன்
இதையெல்லாம் செய்கிறார்" என்று பேசியுள்ளார்.
ஜே.என்.யூ-வில் நடந்த
தாக்குதல் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் திலிப் கோஷ் பேசியிருந்தது
குறிப்பிடத்தக்கது. மாணவி ஆய்ஷி கோஷ் தாக்கப்பட்டது தொடர்பாக
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தாக்குதலில், தலையில் ஒருவர் காயம்பட்டதாக
புகைப்படங்கள் எல்லா இடங்களிலும் பரவின. அது, உண்மையிலேயே தலையில் ஏற்பட்ட
காயமா அல்லது ஏதெனும் வண்ணத்தை ஊற்றிக்கொண்டாரா எனத் தெரியவில்லை. அது
போலி என்றால், அவர்கள் எந்த நிலைக்கும் இறங்குவார்கள் என்பதை நினைத்து
ஆச்சர்யப்படுகிறேன்" என்று பேசினார்.
ஜே.என்.யூ
தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக துர்காபூரில் நடைபெற்ற
பேரணியில் கலந்துகொண்ட ஆய்ஷி கோஷின் தாய் பேசுகையில், ``தாக்குதலுக்குப்
பிறகும் தைரியமாக என்னுடைய மகள் முகத்தைக் காண்பிக்கிறாள். அவளை
இழிவுபடுத்தும் விதமாக திலிப் கோஷ் போன்றவர்கள் பேசுவது துரதிஷ்டவசமானது.
எனது மகளின் காயங்கள் போலியானதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இதுமாதிரியான வார்த்தைகள் என்னுடைய மகளின் குரலையும் அரசாங்கத்துக்கு
எதிராகப் போராடுபவர்களின் குரலையும் அமைதியாக்கப்போவதில்லை" என்றார்.
திலிப்
கோஷ், ஆம்புலன்ஸை வேறு வழியில் செல்லச்சொல்லும் வீடியோவை நெட்டிசன்கள்
பகிர்ந்து, தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.

No comments:
Post a Comment