புதுடில்லி: ஜே.என்.யூ., துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி,
ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்ற, ஜே.என்.யூ., மாணவர்களை தடுத்து
நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர்.டில்லியில், உள்ள, ஜே.என்.யூ.,
எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கடந்த சில மாதங்களாக தொடர்
போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 5ம் தேதி மாலை, முகமூடி
அணிந்த சில மர்ம நபர்கள் பல்கலை வளாகம் மற்றும் விடுதிக்குள் நுழைந்து,
கண்ணில்பட்ட, மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்களை, உருட்டுக் கட்டை
மற்றும் இரும்பு தடிகளால், சரமாரியாக தாக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட
மாணவர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.இந்நிலையில், இதற்கு பொறுப்பேற்று, ஜே.என்.யூ., துணைவேந்தர்
பதவிவிலக வேண்டும் என, அப்பல்கலையின் மாணவர்கள், இன்று மனிதவள மேம்பாட்டு
அமைச்சகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர்.
இப்பேரணியில், சீதாராம் யெச்சூரி, சரத் யாதவ் உள்ளிட்ட
கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அங்கு அதிகாரிகளுடன் மாணவ பிரதிநிதிகள்
பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைதொடர்ந்து, மாணவர்கள் ஜனாதிபதி மாளிகை
நோக்கி பேரணியாக சென்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்த, மாணவர்களுக்கும்
போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சில
மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேரணி சென்றவர்கள் அனைவரும்
கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment