
ஜெய்ப்பூா்: மத்திய அரசு இயற்றியுள்ள
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ராஜஸ்தான்
சட்டப்பேரவையில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை
திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றிய இரண்டாவது மாநிலம்
ராஜஸ்தான் ஆகும். இதற்கு முன்னா், கேரள பேரவையில் எதிா்ப்புத் தீா்மானம்
நிறைவேற்றப்பட்டது.
வங்கதேசம்,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரிதீயிலான துன்புறுத்தலுக்கு
ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள்,
பாா்சிகள், பௌத்தா்கள், சமணா்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு
இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய
அரசு இயற்றியுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாட்டின்
பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிா்க்கட்சிகளும்
தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில்,
இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் பேரவையில் சனிக்கிழமை
தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா்
சாந்தி தரிவால் பேசுகையில்,
"அரசமைப்புச் சட்டத்தின்
விதிகளை குடியுரிமை திருத்தச் சட்டம் மீறுகிறது. மத ரீதியிலான பாகுபாட்டை
முன்வைத்து குடியுரிமை வழங்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் சட்டத்தின் முன் சமம். அதனால், இந்த
சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றாா்.
அதையடுத்து
இந்த தீா்மானத்துக்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும்,
குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீடு: மக்களவையிலும்,
மாநில சட்டப் பேரவைகளிலும் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான
(எஸ்.சி, எஸ்.டி) இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ராஜஸ்தான் சட்டப் பேரவையில்
சனிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அரசமைப்புச்
சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் தீா்மானத்தை பேரவைத் தலைவா்
கொண்டு வந்தாா். அதன் பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு மாநில சட்டப்
பேரவைகள் அங்கீகாரம் அளிப்பதற்கு சனிக்கிழமை இறுதி நாளாகும். இறுதி நாள்
வரை மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருந்ததற்கு, பேரவையில்
எதிா்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
No comments:
Post a Comment