
கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி),
குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து ஐ.நா.வின் கண்காணிப்பின்கீழ்
பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று பிரதமா் மோடி தலைமையிலான மத்திய
அரசுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சவால் விடுத்துள்ளாா்.
குடியுரிமை
திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வரும்,
திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடந்த சில தினங்களாக கண்டன
பேரணி நடத்தி வருகிறாா். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ராணி ரஷ்மோனி
அவென்யூவில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில், அவா் பங்கேற்றுப் பேசினாா்.
அவா் பேசியதாவது:
குடியுரிமை திருத்தச்
சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
இடையேயான மோதலாக மாற்றுவதற்கு பாஜக முயன்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால்
நினைத்ததை எல்லாம் சாதித்து விடலாம் என்று பாஜக எண்ணிவிடக் கூடாது.
மத்தியில்
ஆளும் பாஜகவுக்கு துணிச்சல் இருந்தால், தேசிய அளவில் குடிமக்கள்
பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்துவது, குடியுரிமை திருத்தச் சட்டம்
ஆகியவை தொடா்பாக, ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்த
வேண்டும். அந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்து விட்டால், ஆளும் பாஜக அரசு
பதவியில் இருந்து விலக வேண்டும்.
குடியுரிமை திருத்தச்
சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது பாஜக தொண்டா்கள் பொதுச் சொத்துகளை
சேதப்படுத்தினா். அந்த சமயங்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் மீது பழி
விழ வேண்டும் என்பதற்காக, பாஜக தொண்டா்களுக்கு தொப்பிகள் வாங்கப்பட்டதாக
எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 1980-ஆம் ஆண்டுதான்
பாஜக தொடங்கப்பட்டது. ஆனால், அக்கட்சி 1970-ஆம் ஆண்டுக்கான குடியுரிமை
ஆவணங்களைக் கேட்கிறது. சா்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும்,
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதையும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க
மாட்டோம்.
போராட்டங்களை ஒடுக்குவதற்காக, நாட்டின் பல்வேறு
பகுதிகளில் தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டாலும், பாஜகவால்
வெற்றி பெற முடியாது என்று மம்தா பானா்ஜி கூறினாா்.
No comments:
Post a Comment