
திருநெல்வேலி
"இந்திய நாட்டின் பண்பாடு,
கலாச்சாரம் என்பது ஒரேயொரு மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.
ஆனால், இன்று இந்த நாடு ஒரேயொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே
சொந்தமானது என்று கூறி, திசை திருப்ப சிலர் முயற்சி செய்துகொண்டு
இருக்கிறார்கள். இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என கனிமொழி
பேசினார்.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மகாத்மா
காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தாளாளர் முஹம்மது மீரா முகைதீன் தலைமை வகித்தார்.
முஸ்லிம்
கல்விக் கமிட்டி தலைவர் அப்துல்காதர், துணைத் தலைவர் முஹம்ம அலி அக்பர்,
தலைமை ஆசிரியர் ஷேக் முகம்மது, கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
முதல்வர் ஜெஸிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முஸ்லிம் கல்விக் கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத் வரவேற்று பேசினார்.
விழாவில், 'காந்தியம் காப்போம்' என்ற தலைப்பில் கனிமொழி எம்பி பேசியதாவது:
தலைவர்கள்
என்பவர்கள் அவர்கள் வாழ்ந்த காலங்களைத் தாண்டி நமக்கு செய்திகளை விட்டுச்
சென்றுள்ளனர். நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற எண்ணம் மனித சமூகத்தில்
உள்ளது. சாதி, மதம், நிறம் என ஏதாவது ஒரு குழுவுக்குள் தன்னை
அடக்கிக்கொள்ளும் மனோபாவம் மனித சமூகத்தில் உள்ளது.
இதையெல்லாம்
உடைக்கக்கூடிய ஒன்றுதான் மனிதநேயம். ஒருவரையொருவர் வெறுக்காமல், நட்போடு,
அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்று சொல்வதுதான் மனிதநேயம். அந்த
மனிதநேயத்தைப் பற்றி தனது வாழ்நாள் முழுவதும் பேசியவர் மகாத்மா காந்தி.
பெரியார்,
அம்பேத்கார், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி
உள்ளிட்ட தலைவர்கள் இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபட்டார்கள்.
தன்னைச்
சுற்றி நடக்கும் அநீதியை தட்டிக்கேட்க, மனிதர்கள் மீது அந்தத் தலைவர்கள்
வைத்திருந்த அன்புதான் அதற்குக் காரணம். எல்லா மதங்களும் மனிதர்களை
கடவுளிடம் அழைத்துச் செல்கிறது என்று கூறியவர் மகாத்மா காந்தி. அவரின்
அகிம்சை கொள்கையைப் பல தலைவர்கள் கையில் எடுத்தனர்.
இந்திய நாட்டின்
பண்பாடு, கலாச்சாரம் என்பது ஒரேயொரு மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது
அல்ல. இது எனது நாடு, இது எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்லும்
அருகதை யாருக்கும் கிடையாது.
ஆனால், இன்று இந்த நாடு ஒரேயொரு
மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி, திசை திருப்ப
சிலர் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
இதை மாணவர்கள்
புரிந்துகொள்ள வேண்டும். எதிர்கால இந்தியா உங்கள் கையில் உள்ளது. மதம்,
ஜாதி என்ற வெறி பிடித்த நாட்டில் வாழ யாரும் விரும்ப மாட்டார்கள். நாம்
தமிழர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்துவிட்டு வாழ முடியாது. இந்த நாடு
எல்லோருக்கும் மரியாதை, உரிமை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
இந்த
நாடு அபாயமான திசையை நோக்கி போய்க்கொண்டு இருப்பதைத் தடுக்க வேண்டுமானால்
காந்தியின் கருத்துகள் முக்கியத்துவம் பெற வேண்டும். மத நல்லிணக்கம்
பாதுகாக்கப்பட வேண்டும். இந்த நாடு எங்கள் நாடு என்று சொல்லும் உரிமை எல்லா
மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ளது. தாய்மொழியை காக்க வேண்டும் என்று
காந்தி கூறினார். இந்தி மட்டும்தான் இந்த நாட்டை ஒற்றுமையாக்கும் என்பது
தவறான கற்பிதம்.
ஒரு நாடு அங்கு இருக்கும் சிறுபான்மையின மக்களை
எப்படி நடத்துகிறதோ அதை வைத்துத்தான் அந்த நாட்டை மதிப்பிட முடியும் என்று
காந்தி கூறினார். திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள்
பாதுகாக்கப்பட்டனர். நம்மைச் சுற்றி இருப்பவர்களை புரிந்துகொண்டு
வாழ்ந்தால் தான் அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.
வேறு உணவு
சாப்பிடுபவரை கொல்வேன், வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் இங்கு வாழக் கூடாது,
எனது தெய்வத்தை வழிபடாவிட்டால் இந்த சமூகத்தில் வாழ உனக்கு உரிமை இல்லை
என்று சிலர் கூறுகின்றனர். இந்த அபாய நிலையை நோக்கி நாடு செல்வதைத்
தடுப்பதில் மாணவர்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது.
நாட்டில்
ஒற்றுமை, கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமமாக வாழ
வேண்டும். நமக்காக போராடிய தலைவர்களை மனதில்கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment