Latest News

இன்று 2 புதிய மாவட்டங்கள் உதயம்...முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, வேலூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இரு இடங்களில் பிரம்மாண்ட தொடக்க விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா இன்று காலை திருப்பத்தூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடந்தது. 

விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

ரூ.94 கோடியே 37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.184 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், தொடக்க விழா நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது-. திருப்பத்தூரில் விழா நடக்கும் இடத்தில் 1000 போலீசார், ராணிப்பேட்டையில் 1000 போலீசார் மற்றும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருப்பத்தூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி தலைமையில் அமைச்சர் நிலோபர்கபில் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.ராணிப்பேட்டையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., தலைமையில் முகம்மது ஜான் எம்.பி., சம்பத் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். விழாவையொட்டி திருப்பத்தூர், ராணிப்பேட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவும், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 தாலுகாக்களை உள்ளடக்கி வேலூர் வருவாய் கோட்டமாகவும், மற்றொரு கோட்டமாக குடியாத்தம் கோட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 3 தாலுகாக்கள் உள்ளடக்கி வருகிறது.
இதேபோல் புதிதாக பிரிக்கப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ராணிப்பேட்டை கோட்டத்தில் ஆற்காடு, வாலாஜா ஆகிய தாலுகாக்கள் வருகின்றன. புதிதாக அரக்கோணம் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரக்கோணம், நெமிலி தாலுகாக்கள் இடம் பெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் கோட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய தாலுகாக்கள் இடம் பெறுகிறது. புதிதாக வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாகிறது. இதில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாக்கள் இடம் பெறுகிறது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக சிவன் அருள், போலீஸ் சூப்பிரண்டாக விஜயகுமார், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டாக மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.