Latest News

  

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தி. நகரைச் சேர்ந்த தொழிலாளி கைது16.600

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தி.நகரைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். 

சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் அமைந்துள்ளது அண்ணா அறிவாலயம். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர்கள் பயன்படுத்தும் அலுவலகம், கூட்ட அரங்கு, நிர்வாக அலுவலகம், திருமணமண்டபம், நூலகம் உள்ளிட்ட பல கட்டடங்கள் உள்ளன. கட்சித்தொண்டர்கள், தலைமை அலுவலக நிர்வாகிகள், செய்தியாளர்களால் நிரம்பி வழியும் அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு வந்த மிரட்டல் போன்கால் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்ட்ரா முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துக்கொள்ள மும்பை சென்றிருந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கட்சிக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. 

இந்நிலையில் நேற்றிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன்கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் விரைவில் வெடிக்கும் என்று கூறி போனை வைத்துவிட்டார்.

இதனால் அதிர்ந்து போன கட்டுப்பாட்டறை போலீஸார் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலதிகாரிகள் உத்தரவின்பேரில் உடனடியாக அறிவாலயத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் போலீஸார் சென்றனர். அறிவாலயத்தை அங்குலம் அங்குலமாக போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர்.

ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அவரது செல்போன் எண்ணை வைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் கணேசன்(37) என்பதும், தி.நகர் எஸ்.பி.கார்டன் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மது போதைக்கு அடிமையான கணேசன் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இவ்வாறு தனது செல்போன் மூலம் போன் செய்துள்ளார்.

கணேசனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் நகைப்பூட்டும் பதிலை தெரிவித்துள்ளார். தான் குப்பை பொறுக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அனைத்துப் பிரச்சினைக்கும் தன்னுடைய மனைவியே காரணம் என்றும், அவர் தனக்கு சூனியம் வைத்து விட்டதால் தான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாகவும் அந்த வெறுப்பில் நேற்று திடீரென 100-க்கு போன்செய்து அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு வைத்ததாக கூறியதாகவும், மற்றப்படி வெடிகுண்டு எப்படி இருக்கும் என்று கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து அவர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அண்ணா அறிவாலயம் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் போனால் நேற்று இரவு முழுவதும் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.