ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி இரு வழி நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கே.நவாஸ் கனி எம்.பி.,யிடம் அபுதாபி வாழ் தமிழரும், அங்குள்ள பெட்ரோலிய நிறுவனமொன்றில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வரும் அதிரை என். முகமது மாலிக் அபுதாபியில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
திருச்சி ~ அபுதாபி இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேரடி விமானச் சேவையை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கியது. எனினும், இந்த விமான சேவையானது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டு வந்தனர். எனினும், விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மீண்டும் இந்த விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க வலியுறுத்தி, அபுதாபி அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடாவும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.நவாஸ் கனி எம்.பி யிடம், அபுதாபி வாழ் தமிழரும், அங்குள்ள பெட்ரோலிய நிறுவனமொன்றில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வரும் அதிரை என். முகமது மாலிக் நேரில் சந்திந்து கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கே.நவாஸ் கனி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிர்வாகத்தை சந்தித்து ஆவனம் செய்வதாகக் கூறினார்.
அதிரை என். முகமது மாலிக் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி ~ திருச்சி ~ அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் சேவையை வழங்கி வந்தது. பின்னர் வாரத்தில் இரண்டு நாட்களாக சேவையை சுருக்கியது. பின்னர், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அனைத்து சேவைகளையும் விலக்கிக்கொண்டது.
அபுதாபியை பொருத்தவரையில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தைச் சார்ந்துள்ள சுமார் 6 லட்சம் பயணிகள் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்த பயணிகள் தங்கள் பயணத்திற்கு மாற்று வழி ஏதுமின்றி ஏர் லங்கா விமானத்தை மட்டுமே சார்ந்துள்ள சூழல் அல்லது அருகில் உள்ள சென்னை, பெங்களூர், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அபுதாபி பயணிகள் யாவரும் அவசர தேவைகளுக்கு ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் கூடுதல் தொகையை கொடுத்து பல மணி நேரம் பயணிக்க வேண்டி வருகிறது,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்துள்ள அபுதாபி பயணிகளுக்கு மட்டும் தொடர்ந்து சேவைகள் மறுக்கப்படுவதன் காரணம் புரியவில்லை.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல், இதே கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு பலமுறை அலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து வருகிறேன். எனவே, தாங்கள் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி மீண்டும் இந்த சேவையை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : அதிரை நியூஸ்

No comments:
Post a Comment