
பனாஜி:
மகாராஷ்டிராவைப் போல கோவாவிலும் பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை
உருவாக்கி வருகிறது சிவசேனா. பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் கோவா
பார்வார்ட் கட்சியுடன் சிவசேனா புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.
2017
கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் பாஜக 13
இடங்களிலும் வென்றன. ஆனால் பாஜக, சுயேட்சைகள், சிறு கட்சிகள் ஆதரவுடன்
ஆட்சி அமைத்தது.
அப்போது கோவா பார்வார்ட் கட்சியின் (ஜிஎஃப்பி) 3
எம்.எல்.ஏக்கள் ஆதரவு பாஜகவுக்கு மிக முக்கியமாக இருந்தது. இதனால் பாஜக
அமைச்சரவையில் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களுக்கும் இடம் கிடைத்தது.
கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் துணை முதல்வரானார்.

ஒதுக்கி வைத்த பாஜக
இதனிடையே
காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு கூண்டோடு தாவினர்.
இதனால் பாஜக சட்டசபையில் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து கோவா
பார்வார்ட் கட்சியின் 3 அமைச்சர்களும் நீக்கப்பட்டனர்.

மக்களிடம் மன்னிப்பு
அவர்களுக்குப்
பதிலாக கட்சி தாவிய எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இது
தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜிஎஃப்பி கட்சித் தலைவர் விஜய்
சர்தேசாய், மனோகர் பாரிக்கருக்காகவே பாஜகவை ஆதரித்தோம். அவர் மறைவுக்குப்
பின்னரும் பாஜகவை ஆதரித்தது தவறு; அதற்காக மன்னிப்பு கேட்கிறோம் என
கூறியிருந்தார்.

இரு கட்சிகள் மீது அதிருப்தி
கோவா
மாநில காங்கிரஸ் கட்சியுடனும் ஜிஎஃபி கூட்டணி சேர விரும்பியது. ஆனால்
ஜிஎஃபியை பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது. இதனால் பாஜக,
காங்கிரஸ் இரு கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருந்து வந்தது ஜிஎஃப்பி.

மகாராஷ்டிரா மாற்றம்
இந்நிலையில்
மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் ஏற்பட பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா
வெளியேறியது. அத்துடன் என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து புதிய அரசையும்
அமைத்துள்ளது சிவசேனா.

கோவாவில் புதிய திருப்பம்
இந்த
சூட்டோடு சூடாக கோவாவின் ஜிஎஃப்பி கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது
சிவசேனா. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்
ராவத், மகாராஷ்டிராவைப் போல கோவாவிலும் புதிய கூட்டணியை உருவாக்கும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிஎஃபியின் 3 எம்.எல்.ஏக்களும் தற்போது
சிவசேனாவுடன் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

பாஜக அல்லாத கூட்டணி
மகாராஷ்டிரா,
கோவாவை தொடர்ந்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான வலிமையான கூட்டணியை
உருவாக்குவோம். இந்த நாட்டில் பாஜக அல்லாத ஒரு மெகா கூட்டணியை உருவாக்கவே
நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment