Latest News

  

சொந்தமாக ரயிலை வைத்திருந்த தமிழர்!

வேலூர்: தனியாருக்கு ரயில்களை இயக்கும் உரிமையை அளிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே துறையின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், 19-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர் ஒருவர் சொந்தமாக ரயில் வைத்திருந்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரயில்கள் இயக்கும் உரிமையைத் தனியாருக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே துறை, இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்த தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தனியார் ரயில்கள் இயக்குவதற்காக தமிழகத்தில் சென்னையிலிருந்து மதுரை, பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, மும்பை வழித்தடங்கள் உள்பட 150 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தனியார் ரயில்கள் இயக்குவதற்காக தமிழகத்தில் சென்னையிலிருந்து மதுரை, பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, மும்பை வழித்தடங்கள் உள்பட 150 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தனியார் ரயில்கள் இயக்கும் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதுடன், இதன்மூலம் ரயில் பயணம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் தனியாரால் ரயில் இயக்கப்படுவது இது முதன்முறை அல்ல; ஏற்கெனவே இயக்கப்பட்டதுதான் என்றும், அந்த ரயிலுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் ஒரு தமிழர்தான் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நம்பெருமாள் செட்டியார் (படம்). கி.பி.19-ஆம் நூற்றாண்டைச் (1856 - 1925) சேர்ந்த பிரபலமான கட்டட ஒப்பந்ததாரரான இவர், சென்னையிலுள்ள சிவப்பு நிற கட்டடங்களான சென்னை உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரி, அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் சிற்பக்கலைக் கல்லூரி உள்பட ஏராளமான முக்கிய கட்டடங்களையும் கட்டியுள்ளார். இவர் வாழ்ந்த வீடு வெள்ளை மாளிகை என்ற பெயரில் சென்னை சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே உள்ளது. மூன்று மாடிகள், 30 அறைகளைக் கொண்ட இந்த வீடு, தற்போது அருங்காட்சியகமாக விளங்கி வருகிறது.
தீவிர காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணித மேதை ராமாநுஜரை அவரது இறுதி நாட்களில் இந்த வீட்டில் வைத்துத்தான் நம்பெருமாள் செட்டியார் கவனித்து வந்துள்ளார். அவர் இறந்த பிறகு உறவினர்கள் கைவிட்ட நிலையில், நம்பெருமாள் செட்டியாரே இறுதிச் சடங்குகளையும் செய்துள்ளார். ராமாநுஜரின் இறப்புச் சான்றுகூட இன்றளவும் அந்த வீட்டிலுள்ள அருங்காட்சியகத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் 99 வீடுகள் நம்பெருமாளுக்குச் சொந்தமாக இருந்துள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற நம்பெருமாள், முன்னாள் இம்பீரியல் வங்கியின் முதல் இந்திய இயக்குநராவார். சென்னை மாகாண முதல் மேல்சபை உறுப்பினரான இவர், நாட்டிலேயே முதன்முதலாக அயல்நாட்டுக் கார் வாங்கியவர் என்ற பெருமையையும் உடையவர். இவர் ஈட்டிய வருவாயில் பெரும்பகுதியைக் கோயில் திருப்பணிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் செலவிட்டுள்ளார்.
சென்னை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த நம்பெருமாள் செட்டியார், தனது சொந்தத் தேவைக்காக 4 பெட்டிகள் கொண்ட ரயிலை வைத்திருந்தார். பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட இந்த ரயிலில் திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுவர அவர் பயன்படுத்தி வந்துள்ளார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில்தான் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம். அத்துடன், சிறிய டிராம் வண்டிகளையும், அவை சென்று வருவதற்கான இருப்புப் பாதைகளையும் சொந்தமாக வைத்திருந்துள்ளார்.
சொந்தமாக விமானங்கள்கூட வைத்துள்ள பெரும் பணக்காரர்கள்கூட தற்போது வரை நாட்டில் சொந்தமாக ரயில்களை வாங்கி இயக்க முடிவதில்லை. ஆனால், 19-ஆம் நூற்றாண்டிலேயே சொந்தமாக ரயில் வைத்திருந்த நம்பெருமாள்செட்டியாரின் சிறப்பான பணிகளைப் பாராட்டி ஆங்கிலேய அரசு அவருக்கு "ராவ் சாகிப்' பட்டம், "ராவ் பகதூர்' பட்டம் , "திவான் பகதூர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அவர் வாழ்ந்தப் பகுதியை அப்போது செட்டியார் பேட்டை என மக்கள் அழைத்துள்ளனர்.
காலப்போக்கில் இந்த பெயர் மறுவி சேத்துப்பட்டு என மாறியதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.