உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள், சாக்ஷி மிஸ்ரா. இவர், கடந்த மாதம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி மித்ரா அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதால், தன் தந்தை மற்றும் சகோதரர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவலர்கள் தங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், `மரியாதைக்குரிய எம்.எல்.ஏ-ஜி, பப்பு பர்தால் ஜி மற்றும் விக்கி பர்தால் ஜி (சாக்ஷியின் சகோதரர்கள்) தயவுசெய்து என்னை நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழவிடுங்கள். வருங்காலத்தில் எனக்கோ, அபி மற்றும் அவரின் உறவினர்களுக்கோ ஏதேனும் நேர்ந்தால், அதற்கு என் தந்தை மற்றும் சகோதரர்களே காரணம்” என்று கூறியிருந்தார்.
கடந்த மாதம், உத்தரப்பிரதேசத்தின் ஹாட் டாபிக், இந்த வீடியோ தான். இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-விடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அலகாபாத் நீதிமன்றத்தில் இந்தத் தம்பதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணை, ஜூலை 15-ம் தேதி நடைபெற இருந்தது.

அன்று காலை 8:30 மணிக்கு, நீதிமன்ற வாயிலில் காத்திருந்த தம்பதியை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் காரில் வந்து கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சாக்ஷி பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியில் வரவில்லை. இந்நிலையில், தற்போது தன் தந்தைக்கு எதிராக சில யூ-டியூப் சேனல்கள் பொய்யான செய்தி பரப்புவதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பொது விசாரணை போர்டில் நேற்று புகார் அளித்துள்ளார் சாக்ஷி.
அந்த மனுவில், ‘ சில யூடியூப் சேனல்கள், என் தந்தை மற்றும் மாமனார் குடும்பத்துக்கு எதிராகப் பொய்யான தகவல்களைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற பொய்யான தகவல்களால் எம்.எல்.ஏ-வாக உள்ள என் தந்தையின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது, என் சகோதரர்களின் தொழில் பாதிக்கப்படுகிறது.

பொய்யான தகவல்கள் பரப்புபவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் இணைந்து அமைதியாக வாழ வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால், சிலர் என் வாழ்வில் பிரச்னை செய்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாகத் தன் தந்தைக்கு ஆதரவாக சாக்ஷி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment