Latest News

  

அமெரிக்கா அங்கீகாரத்துடன் அதிரைக்கு பெருமை சேர்த்த பைக் ரேஸ் வீரர் நஜிமுத்தீன்!


நம்ம ஊரு அதிரையில் சமீப காலங்களில் துப்பாக்கி சுடுதல், நீண்ட தூர சைக்கிள் ஓட்டுதல், தடகள சாதனைகள், படிப்பிலும் கெட்டி என பல்வேறு வகையான சாதனையாளர்கள் வெளியாகி சமூக வானில் பிரகாசிக்கத் துவங்கியுள்ளனர், அவர்களிலிருந்து இன்னுமோர் அரிய வரவு நீண்ட தூர சாதனை பைக் ரேஸ் வீரர் நஜி என்கிற நஜிமுத்தீன்

சகோதரர் நஜிமுத்தீன் துபையில் பைக் விற்பனை மற்றும் டாக்கர் ரேலி (Dakar Rally), மோட்டோகிராஸ் டிரேக் (MX Track) போன்ற பலவகையான ரேஸ்களை ஒழுங்கு செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் நாமும் நீண்ட தூர சாதனை பைக் வீரராக மாறினால் என்ன என தோன்றிய எண்ணத்தை நிஜமாக்கி இன்று 2 சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ளார்.

நீண்டதூர பைக் ஓட்டும் வீரர்களுக்காகவே சர்வதேச அளவில் பல சங்கங்கள் செயல்படுகின்றன, இணையதளம் வழியாக பதிவு செய்து அவர்களின் கடும் நிபந்தனைகளின் படி பைக் ஓட்டும் வீரர்களின் சான்றுகளை மிகத்துல்லியமாக ஆய்வு செய்து சுமார் ஒரு வருடத்திற்கு பின்பே சாதனைக்காக அங்கீகார சான்றிதழை வழங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு நீண்டதூர பைக் ரேஸ் சாதனைக்கான எண்ணம் துளிர்விடத் துவங்கியவுடன் முன் முயற்சியாக 1,000 கிலோ மீட்டர் தூரத்தை 14 மணிநேரத்தில் அமீரகத்தை சுற்றிவந்து தன்னை 24 மணிநேரத்தில் 1,600 கி.மீ தூரம் என்ற அங்கீகரிக்கப்பட்ட சாதனைப் பயணத்திற்கு தயார்படுத்திக் கொண்டார்.

அமெரிக்காவில் இயங்கும் Iron Butt Association (www.Ironbutt.org) என்ற நிறுவனத்தில் பதிவு செய்து Road Toads என்ற அமீரக பைக்கர் குழுவினருடன் இணைந்து தனது முதல் சாதனை முயற்சியை 2017 வருடம் மார்ச் 31 ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதற்கான அங்கீகார சான்றிதழ் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் 2018 ஆம் ஆண்டு கிடைத்தது.

வழித்தடம்: 
ஆரம்பம் துபை - ருவைஸ் - மதீனத் ஜாயித் - ராஸ் அல் கைமா - திப்பா - ஹட்டா - அல் அய்ன் - துபையில் நிறைவு.

36 மணிநேரத்தில் 2,500 கிலோ மீட்டர் என்ற தனது 2 வது இலக்கை 8 பேர் கொண்ட Road Toads பைக்கர் குழுவினருடன் இணைந்து Long Distance Rider (https://longdistanceriders.net) என்ற அமெரிக்க நிறுவனத்தில் பதிவு செய்து கடந்த 09.03 2018 அன்று வெற்றிகரமாக 35 மணிநேரத்திலேயே கடந்து சாதனை புரிந்தார். இதற்கான அங்கீகார சான்றிதழ் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் தற்போது தான் கிடைத்தது.

வழித்தடம்: 
ஆரம்பம் துபை - அல் குவைபத் (சவுதி பார்டர்), - சிலா - ராஸ் அல் கைமா - ஹட்டா - அல் அய்ன் - (மீண்டும்) சிலா - லிவா பாலைவனம் - துபையில் நிறைவு.

இவருடைய அடுத்த இலக்கு 24 மணிநேரத்தில் 2,500 கி.மீ என்பதே. இந்த சாதனைகளை நிகழ்த்துவதற்கு பல்வேறு கடினமான நிபந்தனைகளை மேற்படி சங்கங்கள் விதிக்கும். அதேபோல் பைக்கில் பயணிக்கும் வேகம் மணிக்கு 100 கி.மீ முதல் 200 கி.மீ வரை அமைந்திருக்கும். அமீரக சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் ரேடார் கேமராக்கள் அதிகம். கேமராக்கள் இருக்கும் பகுதிகளில் செல்லும் போது மட்டுமே 100 கி.மீ வேகம் மற்றபடி போக்குவரத்து நிலை மற்றும் சாலைக்கேற்றவாறு பைக்குகள் பறக்கும்.

புரிதலுக்காக மட்டும்... 
நம்ம தப்லீக் ஜமாத்துகளில் அமீர், ரஹுபர், முத்தகல்லீம் என காணப்படுவது போல் இவர்களுடைய குழுவிலும் மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவர் Road Captain, ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்தவர் Sweeper, கருப்பு நிற ஆடை அணிந்தவர் Marshal எனவும் அழைக்கப்படுவர். நம்ம நஜி தான் இக்குழுவின் மார்ஷல் என்பதுடன் இச்சாதனைக்குப்பின் சிறந்த மார்ஷல் என்ற (Surprise Medal) பதக்கத்தை Road Toads பைக்கர் குழுவினர் நஜிக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

யார் இந்த நஜி... 
அதிராம்பட்டினம் மேலத்தெரு தூண்டியப்பா வீட்டைச் சேர்ந்த சகோதரர்கள் தாஜுதீன், ஜாகிர் ஹுசைன், ஜெமீல் ரஹ்மான், சஹாபுதீன், மீடியா மேஜிக் நிஜாமுதீன், அமீருத்தீன் ஆகியோரின் இளைய சகோதரரும்,  TIYA அப்துல் மாலிக் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும் மர்ஹூம் ஷாஹுல் ஹமீது அவர்களின் குமாரருமாவார் நஜிமுத்தீன்.

அதிரைக்கு பெருமை சேர்த்த நீண்ட தூர சாகச பைக் வீரருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்

அதிரை அமீன்

துபை ABCC கிரிக்கெட் அணி வீரர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது

Yellow: Captain, Orange: Sweeper, Black: Marshall (Naji)

UAE Road Toads Bikers Team

 
 


1000 கிலோ மீட்டர் தூரம் சென்றதற்கான வழித்தட புகைப்படம்

1,600 கிலோ மீட்டர் தூரம் சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழ்


Meter Readings and Date as proof

Bikers Route Map

2,500 கிலோ மீட்டர் தூரம் சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழ்
நன்றி : அதிரைநியூஸ்


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.