இந்திய வாலிபர் பாராகிளைடிங் செய்யும் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது
சாகசப் பிரியர்களின் விருப்பமான பொழுதுபோக்கில் ‘பாராகிளைடிங்’ கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். இந்தியாவில் இந்த விளையாட்டு தற்போது பிரபலமாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மலைப்பிரதேசங்களில் இந்த சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இமாசலப் பிரதேசம் மணாலியில் இதற்கான தளங்கள் உள்ளன. இமாசலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற விபின் சாஹூ என்ற வாலிபர் முதல்முறையாக பாராகிளைடிங் செய்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
அந்த வீடியோவில் பயிற்சியாளருடன் பாராகிளைடிங் செய்ய தயாராகும் விபின் அதைத் தனது கேமராவில் பதிவு செய்கிறார். செல்ஃபி ஸ்டிக்கின் உதவியுடன் வீடியோ எடுக்கும் அவருக்கு மேலே பறக்க ஆரம்பித்ததும் பயம் தொற்றிக்கொள்கிறது. உயரம் செல்லச் செல்ல மூடுபனி அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. கடவுளை பிரார்த்தனை செய்யும் விபின் சிறிது நேரத்தில் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்து விடுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடன் வந்த பயிற்சியாளரிடம் “ மேலே எல்லாம் பறக்க வேண்டாம். சீக்கிரம் கீழே இறக்கி விடு.. உனக்கு பணம் வேணும்னாலும் தர்றேன்” எனக் கெஞ்ச ஆரம்பித்துவிடுகிறார்.
தொடர்ந்து வானில் வட்டமிட்டபடியே இருக்க, ஒரு கட்டத்தில் பயத்தின் காரணமாக கண்களை மூடிக்கொள்கிறார். 6 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்துவருகிறது. விபின் சாஹூ தற்போது மீம் கிரியேட்டர்களின் கன்டென்ட் ஆகிவிட்டார். இவர் தொடர்பான வீடியோக்கள், மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின்றன. இதுதொடர்பாக பேசியுள்ள விபின் சாஹூ, “ மக்கள் இந்த வீடியோ தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் மகிழ்ச்சியை அளித்துள்ளன. ஒரு பெண் தனது கமென்ட்டில், `இந்த வீடியோவைப் பார்க்கும் போது எனக்கும் எனது கணவருக்கும் சண்டை நடந்தது. ஆனால் நாங்கள் இந்த வீடியோவைப் பார்க்கும் போது நீண்ட நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்' எனக் கூறியிருந்தார்.
``இந்த வீடியோ எனது சகோதரர் எனக்கு தெரியாமல் இணையத்தில் பதிவேற்றிவிட்டார். இது இப்போது எடுத்த வீடியோ இல்லை. கடந்த ஜூலை மாதத்தில் நாங்கள் மணாலி போகும் போது எடுத்தது. பாராகிளைடிங் செய்யும் போது என்னால் சரியாக உட்காரமுடியவில்லை. பயிற்சியாளர் என்னை 10 விநாடிகள்கூட கால்களை நேராக வைக்க விடவில்லை. பாராகிளைடிங்-க்குப் பிறகு நான் ஸ்கை டைவிங் செய்யலாம் என முடிவு செய்துள்ளேன்'' என்கிறார் விபின் சாஹூ.
No comments:
Post a Comment