கடலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காரில் மதுபாட்டில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மது விலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீஸார் உண்ணாமலை ரெட்டி சாவடி சோதனைச் சாவடியில் கடந்த 10-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த பொலிரோ காரை நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவர், காரை நிறுத்திவிட்டு தப்பியோடினார். காரில் சோதனை செய்ததில் அதில் 146 மதுபாட்டில்கள், 30 லிட்டர் சாராயம் மற்றும் பெண் ஒருவரும் இருந்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் சங்காராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மனைவி சமுத்திரகனி (48) என்பது தெரியவந்தது

கணவர் இறந்துவிட்ட நிலையில் சமுத்திரகனி புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்திச் சென்று சங்கராபுரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது மதுபாட்டில் கடத்தல் வழக்குகள் உள்ளன. சமுத்திரகனி தற்பொழுது நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் வசித்து வருகிறார்.
காரிலிருந்து தப்பியவர் குறித்து போலீஸார் சமுத்திரகனியிடம் நடத்திய விசாரணையில், சங்கராபுரத்தில் வசித்தபோது விழுப்புரத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய சுந்தரேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தற்பொழுது கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார். அவரிடம் மதுபாட்டில் கடத்த உதவி கேட்டேன். இன்ஸ்பெக்டர் சுந்தரேசனும் தனது பொலிரோ காரில் புதுச்சேரி அழைத்துச் சென்று மது பாட்டில்கள் மற்றும் சாராயம் வாங்கிக் கொண்டு வந்தபோது சோதனைச் சாவடியில் போலீஸாரிடம் சிக்கியதால் இன்ஸ்பெக்டர் தப்பி ஓடிவிட்டார்'' எனக் கூறினார்

இதையடுத்து கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து சமுத்திரகனியைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இது குறித்து கடலூர் மாவட்ட எஸ்.பி, இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமாருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



No comments:
Post a Comment