அரசுத் திட்டங்கள் பற்றி தெரியாத, செவிலியர் பயிற்சிக் கல்லூரி முதல்வருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மெமோ அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக, உலக உறுப்புதான தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் கலந்துகொண்டனர். பேரணியை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில், கோவை கலெக்டர் ராசாமணி, எம்.எல்.ஏ-க்கள், செவிலியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலிய மாணவிகளிடம், அம்மா பரிசு நலப் பெட்டகம் உட்பட அரசின் மருத்துவத் திட்டங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், செவிலியர்கள் யாருக்கும் அதற்கான பதில் தெரியவில்லை.

இதையடுத்து, செவிலியர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தனலட்சுமியை வரவழைத்து, அதே கேள்விகளைக் கேட்டார் விஜயபாஸ்கர். ஆனால், தனலட்சுமிக்கும் பதில் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து, பதில் அளிக்காத, பொறுப்பு முதல்வர் மீது 17(a) துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment