
பேராவூரணியில் உள்ள பெரியகுளம் ஏரியை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தூர்வாரி வருகின்றனர். இதற்கு பலரும் நிதி உதவி செய்ய எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் பங்கிற்கு தான் உண்டியலில் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்திருக்கிறார். இதைப் பெற்று கொண்ட இளைஞர்கள் நெகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினர்.
பேராவூரணியில் உள்ளது 550 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் ஏரி. இந்த ஏரியின் மூலம் சுமார் 5500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மேலும், அப்பகுதியின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது. பின்னர் இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளாலும் குப்பைகளாலும் அடைக்கப்பட்டுவிட்டன.இதைத் தொடர்ந்து ஏரி நீர் இல்லாமல் தூர்ந்து போய் அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஏரியைத் தூர் வாரி தர வேண்டும் என அரசிடம் பல வருடங்களாக கோரிக்கை வைத்தனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை. பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்க என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஏரியைத் தூர்வாரும் பணியை கடந்த வாரத்தில் தொடங்கினர்.
இதை விகடன் இணையதளத்தில் 35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். முதற்கட்டமாக ஏரியின் கரைகளை பலப்படுத்தும் பணியைத் தொடங்கினர். வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி பணிகள் நடப்பதை அனைவருக்கும் தெரியபடுத்தினர். பின்னர் பலர் தாமாக முன் வந்து ஏரியைக் காப்பதற்கு நிதி உதவியைச் செய்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் பலரும் இதைப் பாராட்டி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களை பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், கார்த்திகா தம்பதியின் மகன் தனிஷ்க் இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த தனிஷ்க் தன் அப்பா மூலம் ஏரியைத் தூர் வாரும் செய்தியைத் தெரிந்து கொண்டார். பின்னர் ``அப்பா நானும் என்னால் முடிந்த உதவியை ஏரியைக் காப்பதற்கு தருகிறேன். நான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
பின்னர் உண்டியலை எடுத்துக்கொண்டு பெரிய குளம் ஏரிக்குச் சென்ற தனிஷ்க் அங்கு இருந்தவர்களிடம் தான் சேர்த்து வைத்திருந்த 876 ரூபாயை உண்டியலோடு கொடுத்ததோடு, `என்னால் முடிந்த சிறு உதவி இதை ஏரியைத் தூர் வாருவதற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். இதில் நெகிழ்ந்து போனவர்கள் சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள் நீ கொடுத்த இந்தப் பணம் இந்தப் பணிக்கு உதவியாக இருக்கும் என அந்தச் சிறுவனை தட்டிக்கொடுத்து பாராட்டி வாழ்த்தினர். இது குறித்து இளைஞர்கள் கூறியதாவது, ``எதிர்காலத்தில் தண்ணீர்த் தேவைக்காக ஏரியைத் துார்வாரும் பணியைத் தொடங்கினோம். தொடக்கத்தில் சின்னச் சின்ன தடைகள் இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொடுக்கும் உற்சாகம் மற்றும் நிதி இவற்றின் மூலம் சீக்கிரமே ஏரி தூர் வாரும் பணியை முடித்து விடுவோம்" என்றனர்.
No comments:
Post a Comment