
இந்தியை திணிக்கவில்லை... மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, தமிழை வளர்க்கும் முயற்சியில் தான் ஈடுபட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்று வரும் நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாசாரத்தை பின்பற்றக்கூடியது. நமது கலாசாரத்தை பின்பற்றும் நோக்கில்தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது.
மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், சூட்கேஸ் போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வது இல்லை. பல விதத்திலும் இந்தி திணிப்பு இருப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. நிர்வாக ரீதியில் ஏதாவது நடந்தவுடன் இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு வருவது தவறானது. தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம்.
மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த "ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்" மூலமாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஹிமாச்சல பிரதேசம், மத்தியப்பிரதேசம், சிக்கிம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது என்றார்.

No comments:
Post a Comment