
கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின்படியோ நேர்மையாகவோ அமையவில்லை, இது குதிரைப் பேரத்தின் வெற்றி என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா 4-வது முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) முதல்வராக பதவியேற்றார்.
இதுகுறித்து, அம்மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதிலும், ஆளுநர் அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தி எடியூரப்பா பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. 3 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவையின் பலம் 221 ஆகும். எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கை 111. எனினும், பாஜகவுக்கு 105 உறுப்பினர்களே உள்ளனர்.
பாஜக 111 எம்எல்ஏ-க்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அதேசமயம், மும்பையில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பட்டியலை கொடுக்க முடியாது. காரணம், அவர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இது அரசியமைப்புச் சட்டத்தின்படியோ, நியாயமான முறையிலோ அமைந்த அரசு அல்ல. அவர்கள் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பார்கள்? அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு ஏதும் அங்கீகாரம் உள்ளதா? இதை மக்களின் வெற்றி என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது மக்களின் வெற்றி அல்ல, குதிரைப் பேரத்தின் வெற்றி" என்றார்.
No comments:
Post a Comment