
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியுடன் படுகொலை செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பப் பின்னணி கேட்போர் நெஞ்சை உலுக்குகிறது. கணவரை இழந்து, வீட்டு வேலை செய்துவந்த அவர் கொலை செய்யப்பட்டதால், மூன்று பெண் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் இருந்து மேலப்பாளையம் செல்லும் வழியில் உள்ள அமிதாப் பட் நகரில் வசித்து வந்தவர் மாரியம்மாள். 10 ஆண்டுகளுக்கு முன்னரே கணவரைப் பறிகொடுத்த இவர், தனது மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டு வேலைக்குச் சென்று வந்தார். அப்படித்தான் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் நேற்று உமா மகேஸ்வரியுடன் மாரியம்மாளும் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரையே நம்பி வாழ்ந்து வந்த அவரின் மூன்று பெண் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.
படிக்கவில்லை என்றாலும் தனது மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நான்கைந்து வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைக்கு மாரியம்மாள் சென்று வந்துள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலமாவது விடியும் என்ற நோக்கில் ஓடியோடி உழைத்தவர் மாரியம்மாள் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வீட்டுக்கு வழக்கம்போல பணிக்குச் சென்ற மாரியம்மாள், அங்கிருந்து மற்றொரு வீட்டுக்கு செல்வது வழக்கம். அங்கு அவர் வரவில்லை என தகவல் வரவே உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்துள்ளார் மாரியம்மாளின் தாய் வசந்தா. அப்போதுதான் மாரியம்மாள் கொலையுண்ட தகவல் அவருக்குக் கிடைத்தது. ஒரே ஆதரவாக இருந்த தாயின் உயிர் எந்தத் தவறும் செய்யாமல் பறிக்கப்பட்டதை ஏற்க முடியாமல் மூன்று பெண் குழந்தைகளும் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர். தங்களின் வாழ்வும், கல்வியும் என்ன ஆகும் என்ற கேள்வியோடு நிற்கும் இவர்களுக்கு யார் பதில் சொல்வது.?
No comments:
Post a Comment