
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ், மற்றும் மஜத எம்எல்ஏ.,க்கள் 12 பேர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடக்கிறது. இருந்தும் ஆட்சி அதிகாரத்தால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எங்களை செயல்படவிடாமல் கட்டுப்படுத்த பார்க்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசை செயலற்றதாக்க திட்டமிட்டுள்ளன என குற்றம்சாட்டினார்.
தற்போது, முதல்வர் குமாரசாமி, அமெரிக்கா சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர். 8 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகல்களை வழங்கி உள்ளனர். ஆட்சியை தக்க வைக்க, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, அமைச்சர் சிவகுமார் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், நான் என் மகளை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, அதனால்தான், நான் வீட்டிற்குச் சென்று விட்டேன். சட்டப்பேரவைக்கு வர முடியாத நிலையில், 11 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொள்ளும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நாளை விடுமுறை என்பதால், திங்கள் கிழமை அவர்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர் இல்லாத நேரத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆட்சி கவிழும் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment