Latest News

``9 பவுன் திருடினோம், அதில் 8 பவுன் கவரிங் நகை சார்!"- போலீஸை சிரிக்க வைத்த கொள்ளையர்கள்


ஆண்டிமடம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து நகையை மீட்டதோடு, `திருடிய வீடுகளில் கவரிங் நகைகளே இருந்ததால் நாங்கள் கஷ்டப்பட்டும் பலனில்லாமல் போய்விட்டதே' என்று கொள்ளையர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு காவலர்களுக்குச் சிரிப்பு வந்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பல்வேறு வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளன. கொள்ளைபோன வீட்டார்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தும் வந்துள்ளனர்.
நகைகள் ஒப்படைப்பு
இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்துக்கு எஸ்.பி-யாக பொறுப்பேற்ற சீனிவாசன், ஆண்டிமடத்தில் தொடர் கொள்ளையைத் தடுக்க ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இதையடுத்து, போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் ஆண்டிமடம் கார்த்திக் மற்றும் மேலநெடுவாய் சிவசுப்ரமணியன் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் இவர்களின் கூட்டாளிகளான வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த எடிசன், இருதயராஜ் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்ததில் பல இடங்களில் திருடியதாக அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிமடம் பகுதியில் கடந்த மே மாதம் 3-ம் தேதி சூனாபுரி ஜேசுதாஸ் மனைவி மரிய ஸ்டெல்லாமேரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சம் பணம், 5 பவுன் நகையும், பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஆண்டிமடம் ராஜவேல் மகன் துரை மாணிக்கம் என்பவரது வீட்டில் தனியாக இருந்த அவரின் மகளிடம் நகை பாலீஸ் போட்டுத் தருவதாகக் கூறி நகைகளைத் தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர் கொள்ளையர்கள். அதேபோல் கவரப்பாளையத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போலீஸாரிடம் பேசும் எஸ்.பி
இதேபோன்று ஆண்டிமடம் பகுதியில் மட்டும் 7 இடங்களில் திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 55 பவுன் நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். இதேபோன்று கடந்த மாதம் மேலநெடுவாய் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தன் மகளின் திருமணத்துக்காகப் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் 50,000 பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். கொள்ளை போனதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை செய்து ஒரு மாத காலத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்தக் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் குறுகிய காலத்தில் தேடிப்பிடித்து கைது செய்த போலீஸாரை கிராம பொதுமக்கள் முன்னிலையில் எஸ்.பி சீனிவாசன் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும், ஆண்டிமடம் போலீஸ் லிமிட்டில் கடந்த 2 வருடங்களாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாகவும், இரவு பகல் பாராமலும் கண்விழித்து கொள்ளையர்களைப் பிடித்து கடந்த மாதம் 4 திருடர்களைப் பிடித்து அவர்களிடமிருந்து 36 பவுன் நகைகளையும், தற்பொழுது 4 திருடர்களைப் பிடித்து அவர்களிடமிருந்து 55 பவுன் நகைகளையும் மீட்டுள்ளனர். இது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

போலீஸாரை பாராட்டும் எஸ்.பி
பிடிபட்ட திருடர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ``ஆண்டிமடத்தில் உள்ள ஒரு மூதாட்டியின் வீட்டில் 9 பவுன் நகை திருடுபோனதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். 9 பவுன் திருடியது உண்மைதான் சார். ஆனால், அதில் 8 பவுன் கவரிங் நகை. ஒரு பவுன் மட்டுமே தங்க நகை சார். நாங்கள் இதைத் திருடுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்'' என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு காவல்துறையினர் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.