
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்பட பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி உத்தரவிட்டது. மேலும் 2 ஆண்டுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த 2 ஆண்டு கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்ரீம்கோர்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் சுப்ரீம்கோர்ட்டு அனுமதித்த 2 ஆண்டு அவகாசம் முடிந்து விட்டது. தற்போது வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே வழக்கு விசாரணையை முடிப்பதற்கு கூடுதலாக 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி நரிமன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு 6 மாதம் அவகாசம் அளிப்பது தொடர்பாக உத்தரபிரதேச அரசு வருகிற 19-ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment