Latest News

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சத இடஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சத இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் புதனன்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) படிப்புகளுக்கு 15 சதவிகித இடமும், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் (எம்.டி., எம்.எஸ் மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்புகள்) 50 சதவிகித இடமும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு பெறும் 4600 மருத்துவ இடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து 490 இடங்கள் அளிக்கப்படுகின்றன. அகில இந்திய அளவில் ஒதுக்கீட்டில் உள்ள மேற்கண்ட 4600 இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை அமல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது.

அதாவது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடும், மத்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்ட பொருளாதார பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிதமான இடஒதுக்கீடும் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், மண்டல் கமிசன் சிபாரிசு அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு அமல்படுத்த மறுத்து வருகிறது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கையினால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இந்த இட ஒதுக்கீடு சலுகையை பெற முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

எனவே, மருத்துவப்படிப்புக்கு ஒதுக்கப்படும் அகில இந்திய கோட்டாவிற்கான மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை அமலாக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசை வற்புறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.