
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தராஜனை
கொண்டு போய் நிறுத்தி பலிகடா ஆக்க பாக்கிறதா அதிமுக தலைமை என்ற கேள்வி
எழுந்துள்ளது.
பாஜக உடனான கூட்டணியை அதிமுக தலைமை எடுத்த எடுப்பிலேயே அமைக்கவில்லை.
கொஞ்சம் ஆறப்போட்டுதான் கூட்டணியை முடிவு செய்தது. அதுகூட தேசிய தலைவர்களை
இங்கே வரவழைத்துதான் பேச்சுவார்த்தை நடத்தியதே தவிர, அதிமுக தரப்பில்
யாரும் டெல்லி பக்கம் போகவில்லை. ஒதுக்கிய தொகுதியும் வெறும் 5தான்.
கொடுத்ததை அமைதியாக வாங்கி கொண்டது பாஜக.
கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, வட சென்னை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகள்
என்றதும் பாஜக கொஞ்சம் விக்கித்து போனது. இதற்கு பதிலாக கன்னியாகுமரி,
கோவை, திருப்பூர், தென் சென்னை மற்றும் ராமநாதபுரம் அல்லது திருச்சி ஆகிய 5
தொகுதிகள் வேண்டும் என்று கேட்க துவங்கியது.
கன்னியாகுமரி
இந்த சமயத்தில் தமிழிசை எங்கே போட்டியிட போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இவரது சொந்த மாவட்டம் கன்னியாகுமரி என்றாலும், திருப்பூர் தொகுதி
தமிழிசைக்கு மிகவும் பிடித்தமான தொகுதி. இங்குதான் இவருடைய குல தெய்வம்
கோயிலும் உள்ளது. இந்த தொகுதியை பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும்,
ஆனால் அதற்கு அதிமுக மறுப்பு சொன்னதாகவும் தகவல் ஒன்று வெளியானது.
பாஜக முக்கியத்துவம்
இதையடுத்து தென்சென்னையில் நிற்கலாம் என்று தமிழிசை விரும்பினார். அதற்காக
தங்களுக்காக ஒதுக்கிய வடசென்னைக்கு பதிலாக தென்சென்னை வேண்டும் என்று
கேட்டுள்ளார். தென் சென்னையை பொறுத்தவரை பாஜகவுக்கு எப்போதுமே
முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இப்போது சிட்டிங் எம்பியாக அமைச்சர்
ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் திரும்பவும் இதே தொகுதியில் போட்டியிட
போகிறாராம். அதனால் தென் சென்னை தொகுதியையும் விட்டுத்தர அதிமுக குறிப்பாக
ஜெயக்குமார் மறுத்துவிட்டாராம்.
பாஜக அதிருப்தி
இதனால் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து தூத்துக்குடியில்
கனிமொழிக்கு எதிராக போட்டியிடும்படி வேண்டுகோளை விடுக்கவும், வேறு
வழியின்றி ஒப்பு கொண்டுள்ளார் தமிழிசை என்று கூறப்படுகிறது. இன்றைக்கு பாஜக
தமிழகத்தில் தழைத்தோங்கி இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே
தமிழிசையின் முயற்சியும், களப்பணியும்தான்.
பணி
பாஜகவின் அதிருப்தி செயல்களுக்காக தமிழக மக்களிடம் வறுபட்டு போனவர்
தமிழிசை. கேலி-கிண்டலுக்கு நெட்டிசன்களிடம் ஆளானவர் தமிழிசை. இன்று பாஜக
தலைவர்கள் தமிழகம் வந்து கூட்டணிக்கு பேசிவிட்டு போகிறார்கள் என்றால்
அதற்கு முக்கிய காரணமே தமிழிசையின் அசாத்திய கட்சி பணியும், அக்கட்சி மீது
வைத்துள்ள நம்பிக்கையும்தான்.
வெற்றி கிட்டுமா?
ஆனால், இன்று அவர் கேட்ட தொகுதிகள் எதுவுமே இல்லாமல் தூத்துக்குடியில்
கொண்டு போய் நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்குமா என்ற கேள்வி
எழுந்துள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக மீது மக்கள்
கடுப்பில் உள்ளனர். தமிழிசையை அங்கு நிறுத்தினால் வெறுப்பு ஓட்டுக்கள்
தமிழிசைக்குதானே வந்து சேரும்? அதிமுக துணிவிருந்தால் தூத்துக்குடியில் தன்
கட்சி வேட்பாளரை நிறுத்தியிருக்கலாமே என்று பாஜக தொண்டர்களே முணுமுணுக்க
ஆரம்பித்துள்ளர்.

பலிகடாவா?
மேலும் கனிமொழி 3 வருடமாக அதே தொகுதியில் பல கட்ட வேலைகளை பார்த்து பலமான
வேட்பாளராக உள்ளார். இந்நிலையில் நாடார் ஓட்டுக்கள் விழும் என்ற ஒரே ஒரு
காரணத்துக்காக பார்த்தாலும், அதே இன ரீதியான ஓட்டுக்கள் கனிமொழிக்கும் விழ
வாய்ப்புள்ளது. அதனால் கனிமொழிக்கு எதிராக நிறுத்தப்படும் தமிழிசைதான்
பலிகடா ஆக்கப்படுகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment