பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற
தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில் ஒருவராகிய எச்.ராஜாவை எதிர்த்து
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி
சிதம்பரம் போட்டியிடுகிறார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக
கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. எட்டு
தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், சிவகங்கை தொகுதிக்கான
வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் இருந்தது.
தற்போது
வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம்
போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. முன்னாள் எம்.பி.சுதர்சன நாச்சியப்பன்
போட்டியிட வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்தி
சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி தரப்பட்ட முடிவு காங்கிரஸ் கட்சியினரிடம்
விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2014 தேர்தலில் சிதம்பரம் கடுமையான பிரசாரத்தை
மேற்கொண்டபோதும் கார்த்தி சிதம்பரம் மோசமான தோல்வியை தழுவினார். சிவகங்கை
தொகுதியில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் செந்தில்நாதன் வெற்றி
பெற்றார். கார்த்தி சிதம்பரடத்தால் நான்காவது இடத்தைதான் பெறமுடிந்தது.
மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில்,
பா.ஜ.க தலைவர்களில் அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்துள்ள எச்.ராஜாவை
எதிர்த்து நிற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு உள்ள வெற்றிவாய்ப்புகள்
குறித்த பேச்சுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், எச்.ராஜாவுக்கு
ஆதரவாக வாக்கு கேட்க தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான
எடப்பாடி பழனிசாமி மூன்று நாட்கள் சிவகங்கை தொகுதிக்கு வரவுள்ளதாக
எச்.ராஜாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலில்
தோல்வியைச் சந்தித்த கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு
வழங்கப்பட்டது ஏன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான
ரமணியிடம் கேட்டோம்.
''கடந்த முறை கார்த்தி சிதம்பரம் தோல்வி
பெற்றிருந்தாலும், அவர் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
ஓட்டுகளை பெற்றிருந்தார். இந்தமுறை திமுக கூட்டணியுடன் போட்டியிடுவதால்,
அவருக்கான வெற்றி வாய்ப்பு பலமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்,''
என்றார்.
அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம்
பேசியபோது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு
குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு தரமுடியாது என்ற அளவுகோலை
வைத்து வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக
கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு இருக்காது என்ற வாதம் இருந்தது.
ஆனால்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர், சுதர்சன
நாச்சியப்பனின் நெருங்கிய உறவினராக இருப்பதால், மீண்டும் அதே குடும்பத்தை
சேர்ந்த ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பு தரப்படவில்லை என வெளிப்படையாக
காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். அதேநேரம், தற்போது ராஜ்ய சபா
உறுப்பினராக சிதம்பரம் பதவியில் உள்ளார், அவரது மகன் கார்த்தி
சிதம்பரத்திற்கு வாய்ப்பு எவ்வாறு வழங்கப்பட்டது என்ற கேள்வியும்
கட்சியினரிடம் எழுகிறது.
பெயர் வெளியிடவிரும்பாத காங்கிரஸ் மூத்த
தலைவர் ஒருவர், முன்னாள் அமைச்சர் சிதம்பரம் எடுத்த முடிவின் காரணமாகதான்
கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிவகங்கை
தொகுதியில் கார்த்தி சிதம்பரம் வெல்வது கடினம்தான் என்றும் கூறினார்.
''அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவின் எச்.ராஜாவுக்கு எதிர்ப்புகள்
உள்ளன. தினகரனின் அமமுகவைச் சேர்ந்த வி. பாண்டி ஆகியோர்
போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் கார்த்தி சிதம்பரம் பெறும் ஓட்டுகள்
வெற்றியை தருமா என்பது சந்தேகம்தான்,''என்கிறார்.

No comments:
Post a Comment