Latest News

  

வயநாட்டுக்கு வந்துடக் கூடாது ராகுல் காந்தி.. முட்டுக் கட்டை போடும் "லெப்ட்" சேட்டன்கள்!

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடக் கூடாது என்பதில் இடதுசாரிகள் தீவிரமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் போட்ட்யிடுவதோடு தென் மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டி இடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அவர் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது.

தமிழகத்தில் திமுகவின் எழுச்சிக்குப் பிறகு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்கள் தோள் மீதேறியே காங்கிரஸ் பயணித்து வருகிறது. அப்போதும் கூட மக்களவை தேர்தல்கள் என்றால் கூட்டணி அமைக்கும்போது தமிழகத்தில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ்தான் போட்டியிட்டு வந்தது.

கழுதை தேய்ந்து
கட்டெறும்பான காங்கிரஸ்
பின்னர் மாநிலக் கட்சிகளுக்கு இணையாக போட்டியிட்டு வந்தது, பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக திராவிடக் கட்சிகள் கொடுக்கும் தொகுதியை வாங்கி கொண்டு போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலைமை கடந்த 2014 ம் ஆண்டு இன்னும் மோசமாகியது. 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த திமுக 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை கழட்டி விட்டுவிட்டது. கூடா நட்பு கேடாய் முடிந்தது என்றார் கருணாநிதி.

ஈழப் படுகொலை
தமிழர் படுகொலை
அப்போது அந்த காலத்தில் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட ரணம் தமிழகத்திலும் ஆறாமல் இருந்தது. ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்ற எண்ணம் வலுப்பெற்று இருந்த காரணத்தால் கருணாநிதி இப்படி கூறி காங்கிரசை கை கழுவினார். அந்த தேர்தலில் தனித்து நின்ற காங்கிரஸ் அதற்கு முன்பு தனக்கிருந்த செல்வாக்கையும் இழந்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. வெற்றி பெறவில்லை என்பதல்லாமல் தேர்தலில் போட்டியிட கூட தமிழக தலைவர்கள் தயங்கிய காலம் அது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தான் போட்டியிடாமல் தனது மகன் கார்த்தியை போட்டியிட வைத்தார். அவரும் தோற்றுப் போனார்.

கை கோர்த்த திமுக
காங்கிரஸுடன் உறவாடும் திமுக
அதன் பின்னர் 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரசும் திமுகவும் மீண்டும் கை கோர்த்தன. இருந்தாலும் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் தோற்றுப் போனது. தான் இழந்த செல்வாக்கை அது மீண்டும் பெறவில்லை. இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராகுல் இங்கு போட்டியிடுவதன் மூலம் அவருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாவதுடன் தென் மாநிலங்களில் காங்கிரசை வளர்க்க குறிப்பாக தமிழகத்தில் காங்கிரசை இன்னும் பலப்படுத்த அது ஒரு பெரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.

மக்களின் கோபம்
குறையாத மக்கள் கோபம்
அதோடு ஈழம் தொடர்பாக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் தமிழக மக்களுக்கு சற்று கோபம் குறையவும் நல்வாய்ப்பாக ராகுலின் போட்டி இருந்திருக்கும். ஆனால் தமிழக காங்கிரசும் ராகுலும் கிடைக்கவிருந்த நல்வாய்ப்பை தவற விட்டுவிட்டதாகவே தமிழக மக்கள் எண்ணுகின்றனர். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை கேரள காங்கிரஸில் கிளம்பியது. ஆனால் அதற்கு அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையாக முட்டுக்கட்டை போட்டு வருகின்றனராம்.

கேரளாவில் முரண்பாடு
முரண்படும் அரசியல்
தமிழகத்தில் காங்கிரஸும், இடதுசாரிகளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன. கேரளாவுக்கு அருகில் உள்ள கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு திமுகவுடன் இணைந்து காங்கிரஸும் வாக்கு சேகரிக்கிறது. ஆனால் அருகில் உள்ள கேரளாவில் இருவரும் இரு முனைகளில் நிற்கின்றனர். ராகுல் காந்தியை கடுமையாக எதிர்த்து வருகிறதாம் சிபிஎம். . அரசியல்னாலே இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா.. ஒரே நாட்டில் எத்தனை எத்தனை முகங்கள்!

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.