
(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)
தற்போதைய
ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து சீவகங்கை சீமை என்ற பெயரில் கடந்த
1984ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம், 1997இல் தற்போதைய சிவகங்கை என்ற
பெயரை பெற்றது.
1967ஆம் ஆண்டு, அதாவது நாட்டின் நான்காவது மக்களவை
தேர்தல் நடந்தபோது சிவகங்கை மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த
தொகுதியில் தற்போது 15,29,698 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமயம்,
ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஆறு
சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது.
சிவகங்கையின் தற்போதைய மக்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் இருந்து வருகிறார்.
தொகுதியின் வரலாறு
இதுவரை
சிவகங்கை கண்டுள்ள 13 மக்களவை தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது அது
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்துள்ளது தெரிகிறது.
ஏனெனில்,
இதுவரை சிவகங்கை தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டுள்ள காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரம், ஏழு முறை அங்கிருந்து மக்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி
- மக்களவை தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணிகளின் வேட்பாளர்கள்
அதாவது,
1984 முதல் 1996ஆம் தேர்தல் வரையிலான மூன்று தேர்தல்களில் சிவகங்கை
தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு
வெற்றிபெற்ற ப. சிதம்பரம், அதற்கடுத்து 1996 மற்றும் 1998இல் நடைபெற்ற
தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு
தொடர்ந்து ஐந்தாவது முறையாக மக்களவை உறுப்பினரானார்.
இந்நிலையில்,
1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சியின் சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப. சிதம்பரம் முதல்
முறையாக தோல்வியை தழுவினார். அதுவும், தொடர்ந்து நான்கு முறை ப.
சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிறுத்திய காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளரான சுதர்சன நாச்சியப்பனைவிட 1,18,550 வாக்குகள் குறைவாக பெற்றார்.
அதுவும்
குறிப்பாக, தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவின் சார்பாக
சிவகங்கை தொகுதியில் களமிறங்கும் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா
அந்த தேர்தலில் சுதர்சன நாச்சியப்பனை விட நான்கு சதவீத வாக்குகளே குறைவாக
பெற்றிருந்தார் அவர். எச். ராஜாவைவிட சுமார் 1,25,000 வாக்குகள் குறைவாக
பெற்றிருந்த ப. சிதம்பரத்தால் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
சிவகங்கை மக்களவை தொகுதி | ||||
---|---|---|---|---|
தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | இரண்டாம் இடம் | கட்சி |
1967 | தா. கிருட்டிணன் | திமுக | சுப்ரமணியன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1971 | தா. கிருட்டிணன் | திமுக | கண்ணப்ப வள்ளியப்பன் | ஸ்தாபன காங்கிரஸ் |
1977 | தியாகராஜன் | அதிமுக | ராமநாதன் செட்டியார் | ஸ்தாபன காங்கிரஸ் |
1980 | சுவாமிநாதன் | இந்திய தேசிய காங்கிரஸ் | பாண்டியன் | இந்திய கம்யூனிஸ்ட் |
1984 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரஸ் | தா. கிருட்டிணன் | திமுக |
1989 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரஸ் | கணேசன் | திமுக |
1991 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரஸ் | காசிநாதன் | திமுக |
1996 | ப. சிதம்பரம் | தமிழ் மாநில காங்கிரஸ் | கௌரிஷங்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1998 | ப. சிதம்பரம் | தமிழ் மாநில காங்கிரஸ் | காளிமுத்து | அதிமுக |
1999 | சுதர்சன நாச்சியப்பன் | இந்திய தேசிய காங்கிரஸ் | எச். ராஜா | பாஜக |
2004 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரஸ் | கருப்பையா | அதிமுக |
2009 | ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரஸ் | ராஜ கண்ணப்பன் | அதிமுக |
2014 | செந்தில்நாதன் | அதிமுக | துரைராஜ் சுபா | திமுக |
இந்நிலையில்,
2001ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூப்பனார்
உயிரிழக்க, அக்கட்சியின் தலைவராக பதவியேற்ற அவரது மகன் ஜி.கே. வாசன்,
2002ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸுடன் கட்சியை இணைத்தார்.
அதைத்தொடர்ந்து,
2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திய காங்கிரஸ் கட்சியின்
சார்பாக சிவகங்கை தொகுதியில் களமிறங்கிய ப. சிதம்பரம் தன்னை எதிர்த்து
போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவைவிட சுமார் 1,60,000 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
கார்த்தி சிதம்பரம்
2009ஆம்
ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவை தேர்தலின்போது மீண்டும் காங்கிரஸ்
கட்சியின் சார்பாக களமிறங்கிய ப. சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ
கண்ணப்பனைவிட வெறும் 3,354 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்களவை
தேர்தலின்போது, ப. சிதம்பரத்தை ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய
சிவகங்கை தொகுதி அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டது.
எனினும். அத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனைவிட
3,71,315 வாக்குகள் குறைவாக பெற்ற கார்த்தி சிதம்பரத்தால் மூன்றாவது
இடத்தையே பிடிக்க முடிந்தது.
- வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: திமுக - அதிமுக இடையே எட்டு தொகுதிகளில் போட்டி
- திருப்பூர் மக்களவை தொகுதி: வெளிமாநில தொழிலாளர்கள் வெற்றியை நிர்ணயிப்பார்களா?
இந்நிலையில்,
அடுத்த மாதம் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்றவுள்ள 17ஆவது மக்களவைக்கான
தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ்
கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ப. சிதம்பரம் மற்றும்
சுதர்சன நாச்சியப்பன் குழுவினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, சிவகங்கை
தவிர்த்து தாங்கள் போட்டிடும் மற்ற 9 தொகுகளுக்கான வேட்பாளர் பட்டியலை
முதலில் வெளியிட்டது காங்கிரஸ். நீண்ட இழுபறிக்கு பின்னர் ப. சிதம்பரத்தின்
மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக
காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக ஆறு முறை வென்றுள்ள நிலையில், பாஜக தனது தேசிய செயலர்களில் ஒருவரை இம்முறை களமிறக்கியுள்ளது.
வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாஜகவின் சார்பாக அக்கட்சியின் சார்பாக எச். ராஜா களம் காண்கிறார்.
பிரதான பிரச்சனைகள்
தமிழகத்தில்
பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்து இருக்கும் தொகுதிகளில் சிவகங்கையும்
ஒன்று. ஆனால், இந்த தொகுதியில் விவசாயத்திற்கு அடிப்படையாக விளங்கும் வைகை
நதி புதர் படிந்து காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வைகை
நதியை புனரமைத்து, அதிலிருந்து விவசாயத்திற்கு தேவையான பாசன வசதியை
ஏற்படுத்தி தருவதுடன், ஊரக பகுதிகளில் நீடிக்கும் தண்ணீர் பிரச்சனையையும்
தீர்க்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
நிலக்கரியின்
மாறுபட்ட வடிவமான கிராஃபைட் சிவகங்கை பகுதியில் அதிகளவில் இருப்பது பல
தசாப்தங்களுக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டாலும், அதை முதலாக கொண்ட
தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உண்டாக்கப்பட்ட வேண்டுமென்று
சிவகங்கை மக்களவை தொகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
சிவகங்கை
மக்களவை தொகுதியாக மட்டுமின்றி, மாவட்ட தலைநகரமாகவும் விளங்கும் நிலையில்,
அதன் வழியாக செல்லும் பல்வேறு விரைவு ரயில்கள் சிவகங்கையில் நிற்பது கூட
இல்லை என்றும், நகர்ப்புற பகுதிகளுடன் ஊரக பகுதிகளை இணைப்பதற்கு சாலை
வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை
விடுகின்றனர்
No comments:
Post a Comment