
முந்தைய அரசுகள் ராணுவத்தை புறக்கணித்ததாக, டெல்லியில் இன்று நடைபெற்ற
தேசிய போர் நினைவகம் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
குற்றம்சாட்டினார்.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் காம்ப்ளக்ஸ் பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில்
ரூ.176 கோடி செலவில் தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று
பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதையொட்டி
நினைவிடத்தின். அடிபாகத்தில் தீபத்தை அவர் ஏற்றி வைத்தார்.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், நினைவிடத்தின் மீது, ரோஜா
பூக்களை தூவி மரியாதை செலுத்தின.
போர் நினைவிட சிறப்பு
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற பல்வேறு போர்களில் உயிர் தியாகம்
செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த நினைவிடம்
அமைக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான போர், பாகிஸ்தானுக்கு எதிரான
போர்கள், இலங்கைக்கு இந்தியா அமைதிப்படையை அனுப்பியபோது ஏற்பட்ட ராணுவ
வீரர்கள் உயிரிழப்பு போன்றவற்றை போற்றும் வகையில் இந்த நினைவிடம்
அமைக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
இன்று மாலை நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய
பாதுகாப்பு துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன், பேசுகையில், நாட்டு
மக்களிடம், நாட்டில் தற்போது நாங்கள் எதிர்பார்ப்பது நம்பிக்கையைத்தான்.
பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள். முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் என்பது
எங்கள் அரசில், மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் விஷயம் ஆகும்
என்றார்.
ஒரே குடும்ப ஊழல்கள்
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது:, முந்தைய ஆட்சிக் காலங்களில்
இந்திய ராணுவ வீரர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை என்னைவிட நீங்கள்
நன்கு அறிவீர்கள். போபர்ஸ் பீரங்கி முதல் ஹெலிகாப்டர் கொள்முதல் வரை
அனைத்து விசாரணைகளும் ஒரே குடும்பத்தை நோக்கியே கையை நீட்டுகின்றன. இது பல
விஷயங்களை உங்களுக்கு உணர்த்தும் என்று உணர்கிறேன்.

ஆதாயம் இல்லை
தற்போது இந்த நபர்கள் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை மோசடி என்று நிரூபிக்க
முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளனர். மிக விரைவில் இந்தியா தனது முதல்
ரபேல் போர் விமானத்தை பெறும். அப்போது இந்த சதித் திட்டம் அனைத்தும்
தோல்வியில் சென்று முடிவடையும். பாதுகாப்பு துறையினரின் தேவைகளை பூர்த்தி
செய்வதில் முந்தைய அரசுகள் மிக மோசமான மெத்தனப் போக்கை கையாண்டன. ஒருவேளை
ராணுவ வீரர்களை கௌரவிப்பதில் அவர்களுக்கு அரசியல் ரீதியாக எந்த ஆதாயமும்
கிடைக்காது என்பது இதன் நோக்கமாக இருந்திருக்கலாம்.

குண்டு துளைக்காத ஜாக்கெட்
ஒரு லட்சத்து 46 ஆயிரம் குண்டு துளைக்காத ஜாக்கெட் வாங்குவதற்குக் கூட
அவர்களால் முடியவில்லை. இந்த ஜாக்கெட்டுக்குள் இல்லாமல் நமது ராணுவ
வீரர்கள் எதிரிகளை சந்தித்தனர். 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை
புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் தேவை என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள், 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை வாங்கியுள்ளோம். எங்கள் அரசுக்கு
தேசம் முதலில். குடும்பமே முதல் என்ற நிலையை மாற்றியுள்ளோம். இவ்வாறு
பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
No comments:
Post a Comment