
சென்னை அருகே சிறுசேரியில் உள்ள தனியார் விண்வெளி ஏவுதளத்திலிருந்து
என்எஸ்எல்வி 7 பலூன் செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இன்று காலை
9.45 மணிக்கு ஏவப்பட்ட இந்தசெயற்கைக் கோள் மிஷன் வெற்றிகரமாக அமைந்ததாக
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர்
ஜெ. ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி அவருக்கு அவருக்கு அஞ்சலி
செலுத்தும் வகையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும், கிரெசன்ட் கல்லூரியும் இணைந்து
உருவாக்கிய என்எஸ்எல்வி கிரெசன்ட் சாட் செயற்கைக் கோளாகும் இது. இந்த
செயற்கைக் கோளின் பேலோடை, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் சப் ஜூனியர் டீம் லீட்
மாஸ்டர் பிரதிக் (10 வயது) உருவாக்கியிருந்தார். விண்வெளியில் நிலவும்
வெப்ப நிலை குறித்து இந்த செயற்கைக் கோள் தகவல் சேகரிக்கும்.
இதன்படி பலூன் மூலம் இந்த செயற்கைக் கோளானது விண்ணில் செலுத்தப்படும்.
குறிப்பிட்ட தொலைவு வரை செல்லும் இந்த பலூனில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக்
கோள் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொண்ட பின்னர் பலூனில் உள்ள வாயு
தீர்ந்த பின்னர் கீழே வரும். சேகரிக்கப்பட்ட டேட்டாக்கள் பின்னர்
ஆய்வுக்குட்படுத்தப்படும். இதில் பலூனின் எடை 1200 கிராம் ஆகும். இதை
பாராசூட் மற்றும் பேலோடுடன் இணைத்து செலுத்தப்பட்டது.

செயற்கைக் கோள் செலுத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன் கலந்து கொண்டார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஸ்பேஸ் போர்ட் இந்தியா என்ற தனியார் விண்வெளி மையத்தில் இது செலுத்தப்பட்டது.
கிரெசன்சாட் செயற்கைக் கோளானது கியூப்சாட் வகை செயற்கைக் கோளாகும்.
வருங்காலத்தில் இதுபோன்ற கியூப்சாட் திட்டங்களுக்கு இது உதவும். இதில்
பல்வேறு வகையான பேலோடுகள் உள்ளன. அதாவது விண்ணில் உள்ள வெப்ப நிலை
ஆராய்வது, மேல் வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் குறித்து அறிதல்,
சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஆய்வது, மருத்துவத் துறையில் ரிமோட்
சென்சிங் பயன்பாடு, பசுமைப் படலத்தின் அடர்த்தியை அறிவது என பல
பயன்பாடுகளுக்கு இது உதவும்.

விண்வெளி அறிவியல்தான் இந்தியாவின் எதிர்காலம். இந்தியா அதில் ஏற்கனவே
வேகமாக முன்னேறி வருகிறது. சந்திராயன், ககன்யான் ஆகியவை அதில்
முக்கியமானவை. நமது நாட்டின் பெருமையை பறை சாற்றக் கூடியவை. எனவே பள்ளி,
கல்லூரி மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை
அதிகரிக்கும் நோக்கில் ஸ்பேஸ் கிட்ஸ் செயல்பட்டு வருகிறது.

பலூன், சப் ஆர்பிட்டல், ஆர்பிட்டல் வகை செயற்கைக் கோள்களை ஏவும்
திட்டம் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவிலேயே ஸ்பேஸ்ட் கிட்ஸ்
இந்தியா நிறுவனம் மட்டுமே 7 என்எஸ்எல்வி சாட்டிலைட்டுகள், 2 சப் ஆர்பிட்டல்
மிஷன்கள் மற்றும் ஒரு ஆர்பிட்டல் மிஷன் ஆகியவற்றை செலுத்தியுள்ளது என்று
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரி டாக்டர் ஸ்ரீமதி
கேசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment