
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர்
நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கவில்லை என்று
காங்கிரஸ் உட்பட 21 எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று 21
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது
எழுந்துள்ள பதற்ற நிலை குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங், சந்திரபாபு
நாயுடு, சரத்பாபு, பிரகாஷ் காரத், திருச்சி சிவா உள்ளிட்ட
எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில் தீர்மானம்
ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில்
பாதுகாப்பு படையினருக்கு ஆதரவு அளிக்கப்படும்.
26ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் சென்று நடத்தப்பட்ட தாக்குதலுக்காக இந்திய விமானப் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காக,
ஆளுங்கட்சி (பாஜக) பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.
தேசப்பாதுகாப்பு என்பது, குறுகிய அரசியல் லாபங்களுக்கு அப்பாற்பட்டதாக
இருக்க வேண்டும்.
ஜனநாயக நடைமுறையான அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெறும் நடைமுறை
பின்பற்றப்படவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.
மாயமான நமது பைலட்டின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்.
இந்தியாவின் ஒருமைப்பாடு இறையாண்மையை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில்
வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment