
இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம் - அன்புமணி விளக்கம்!
சென்னை:அதிமுகவுடன் ஏன் கூட்டணி என்பது குறித்த பாமக இளைஞரணி தலைவர் அன்பு
மணியின் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியில் முடிந்தது. செய்தியாளர்களின்
கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் அன்புமணி டென்ஷனானார்.
அதிமுக, பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து எதிர்வரக் கூடிய லோக்சபா தேர்தலை
சந்திக்கிறது. பாமகவுக்கு 7 எம்பி தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா பதவியும்
தருவதாக தேர்தல் உடன்பாடு கையெழுத்தாகி இருக்கிறது.
தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு நாளாக... நாளாக எதிர்மறையான கருத்துகள்
பதிவாகி வருகின்றன. பல்வேறு அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் எல்லாம் பாமக
பற்றியும், தேமுதிகவை சுற்றியுமே இருக்கின்றன.
அன்புமணியின் விளக்கம்
இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி ஏன் என்று அன்புமணி விளக்கம் அளிப்பார்
என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன் படி
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கூட்டணி ஏன்?
தொடக்கத்தில் அதிமுக வுடனான கூட்டணி ஏன்? 10 கோரிக்கைகள் குறித்து அவர்
விளக்கம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க
தொடங்கினர்.
குட்கா ஊழல்
ஊழல் குற்றச்சாட்டுகளையும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விமர்சித்த பாமக
இப்பொழுது அதிமுகவிடம் கூட்டணி வைத்தது ஏன்? என்று அவர்கள் கேட்டனர். அது
மட்டுமல்லாமல் குட்கா ஊழல் குறித்து அமைச்சர்களையும் விமர்சித்தீர்கள்?


திணறிய அன்புமணி
குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் என அனைவரையும் கடுமையாக விமர்சித்துவிட்டு
இப்பொழுது தேர்தலில் அவர்களிடம் கூட்டணி வைத்தது மக்களை ஏமாற்றுவதாக
இல்லையா என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர். அந்த கேள்விகளால் சற்றே
பதிலளிக்க முடியாமல் அன்புமணி திணறினார்.
கோபமான பேச்சு
தொடர் கேள்விகளால் துளைத்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில்
அளிக்க முடியாமல் அன்புமணி தடுமாறினார். ஒரு கட்டத்தில் கோபமடைந்து
பேசினார்.
தண்ணி கொடுங்கப்பா
முன்னணி தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரை பார்த்து கை நீட்டி, அவருக்கு
தண்ணி கொடுங்கப்பா, ரொம்ப ஆவேசமா இருக்காரு என்று கூறி சமாளித்தார்.
அப்படியும் கேள்வி கணைகள் தொடர்ந்தன.
ஒருமையில் பேசிய அன்புமணி
மற்றொரு ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரும் கேள்விகளை எழுப்ப... பல
கேள்விகளுக்கு பதிலளித்து விட்டேன்... திரும்ப, திரும்ப கேட்கிறாய் என்று
ஒருமையில் பேசினார்.
மைக்கை வாங்கு
அமைதியாக உட்காருங்க... மைக்கை வாங்கு.. இல்லை சட்டசபை மாதிரி மைக்கை ஆப்
பண்ணு... ஏன் இவ்வளவு ஆவேசமா இருக்கீங்க என்று தொடர்ந்து கேள்விகளுக்கு
பதிலளிக்காமல் அன்புமணி திணறினார். செய்தியாளர்களின் சரமாரி கேள்விகள்
நீண்டு கொண்டேயிருக்க.. பாதியில் பிரஸ் மீட்டை முடித்து விட்டு அன்புமணி
கிளம்பினார்.
சகஜமான நிலைப்பாடு
வழக்கமாக.. செய்தியாளர்களிடம் சகஜமாக உரையாடும் வழக்கத்தை கொண்டவர்
அன்புமணி. ஆனால்.. அரசியல் நிலைப்பாடுகள், அது தொடர்பான கேள்விகள் காரணமாக
இந்த முறை அவர் கோபமடைந்த நிகழ்வு செய்தியாளர்கள் மத்தியிலே ஆச்சரியத்தை
ஏற்படுத்தி இருக்கிறது.
நினைவுகள்
ஏற்கனவே திராவிட கட்சிகளிடம் 100 க்கு 101 சதவீதம் கூட்டணி வைக்க மாட்டோம்
என்று அன்புமணியும், 100 க்கு 200 சதவீதம் அவர்களுடன் கூட்டணி
வைக்கமாட்டோம் என ராமதாசும் கூறியது இந்த தருணத்தில் நினைவுக்கு வந்தால்
நாங்கள் பொறுப்பல்ல.
No comments:
Post a Comment