
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி 28000 கோடி ரூபாயை இடைக்கால
டிவிடெண்டாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலை
எதிர்கொள்ள வசதியாக இந்த நிதி வழங்கப்படுகிறது. சக்தி காந்ததாஸின் இந்த
நடவடிக்கை மோடி அரசுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் செலுத்தப்படும்
என அறிவிக்கப்பட்டது. சுமார் 10.5 பில்லியன் ரூபாய் பெறுமான
இத்திட்டத்தின் முதல் தவணையை வரும் மார்ச் மாத இறுதிக்குள் விவசாயிகளின்
வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதற்கு நிதி தேவைப்படுகிறது. மத்திய
அரசின் இக்கட்டான நிலைமையை நன்றாக உணர்ந்த ரிசர்வ் வங்கியும் இடைக்கால
டிவிடெண்டை வழங்க முடிவெடுத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் ஆண்டு வருமானத்தில், அதாவது லாபத்தை
உபரியாக கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதன்மூலம்
வரும் ஆண்டுகளில் லாபம குறைவாகவோ அல்லது நட்டத்தை சந்தித்தாலோ, முன்னரே
சேர்த்து வைத்துள்ள கையிருப்பு லாபத்தில்(Reserves and Surplus) இருந்து
எடுத்து நிதி நிலைமையை சரி செய்துகொள்ள முடியும்.
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும் தங்களின் ஒப்வொரு ஆண்டு
லாபத்தை உபரியாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு கேட்கும்போது தருவது வழக்கம்.
இது காலம் காலமாக உள்ள நடைமுறை வழக்கமாகும். இதற்கு முன்னரும் கடந்த
2014ஆம் ஆண்டில் 33010 கோடி, 2015ஆம் ஆண்டில் 52679 கோடி, 2016ஆம் ஆண்டில்
65896 கோடி, 2017ஆம் ஆண்டில் 65876 கோடி, 2018ஆம் ஆண்டில் இடைக்கால
டிவிடெண்டாக 10000 கோடியும், பின்னர் 30659 கோடியை வழங்கி உள்ளது.

இடைக்கால பட்ஜெட்
நடப்பு 2019ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே 40000 கோடியை மத்திய
அரசுக்கு வழங்கிவிட்டது. ஆளும் பாஜக அரசு வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள
வசதியாக 2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு
இலவசங்களையும் நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது.

நெருக்கடி கால நிதி
இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ள இலவசங்களையும் நலத்திட்ட உதவிகளையும்
நிறைவேற்ற போதுமான கையிருப்பு இல்லாததால் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின்
கையிருப்பில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உபரி
கையிருப்பு என்பது வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் காலத்தில்
உதவுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காப்பு சேமிப்பு திட்டம். இந்த
திட்டத்தில் கை வைப்பது என்பது மிக ஆபத்தான செயலும் கூட.

சக்தி காந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் முன்னால் ஆளுநர் உர்ஜித் பட்டேல் உபரி நிதியை தர ஒப்புக்
கொள்ளாததால் தான் பதவி விலக நேர்ந்தது.
உர்ஜித் பட்டேலுக்கு பின்னர் ஆளுநராக வந்துள்ள சக்திகந்த தாஸ் மத்திய
அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பதால்தான், பதவிக்கு வந்தவுடன் 40000
கோடியை வாரி வழங்கினார்.

இடைக்கால டிவிடெண்ட்
டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் நடைபெற்ற
பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய அரசுக்கு 28000 கோடி ரூபாயை இடைக்கால
டிவிடெண்டாக வழங்க முடிவு செய்யப்பட்டது. நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில்
தொடர்ந்து 2வது ஆண்டாக இடைக்கால டிவிடெண்டாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment