Latest News

  

கவர்னர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டம்நாராயணசாமி 2-வது நாளாக விடிய விடிய தர்ணாதுணை ராணுவ பாதுகாப்புடன் வெளியேறிய கிரண்பெடி டெல்லி பயணம்

கவர்னர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டம்நாராயணசாமி 2-வது நாளாக விடிய விடிய தர்ணாதுணை ராணுவ பாதுகாப்புடன் வெளியேறிய கிரண்பெடி டெல்லி பயணம்
புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே கவர்னராக கிரண்பெடி நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக் காமல் கோப்புகளை திருப்பி அனுப்புவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.

ஆனால் கவர்னர் கிரண்பெடி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் அரசின் இலவச பொருட்களை வழங்க முடியும் என்று கூறி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கவர்னர், முதல்-அமைச்சர் இடையேயான மோதல் நீடித்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி 39 மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு கவர்னர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கவர்னர் கிரண்பெடியை கண்டித்து நேற்று முன்தினம் மதியம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தினை தொடங்கினார்.

இது பற்றிய தகவல் அறிந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விடிய விடிய தர்ணா நடந்தது. முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் போராட்டம் நடந்த இடத்திலேயே படுத்து தூங்கினர். இதனால் வெளியே செல்ல முடியாத அளவுக்கு கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையிலேயே சிறைபிடிக்கப்பட்டார்.

இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. அதிகாலை 4 மணிக்கு கண்விழித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கடற்கரை சாலையில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து சட்டசபை வளாகத்திற்கு சென்று குளித்தார். பின்னர் காலை 5.40 மணிக்கு மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

காலை 6 மணியளவில் கவர்னர் மாளிகையில் தேசியகொடி ஏற்றிய போது முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இதையொட்டி ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டதன்பேரில் அரக்கோணம், ஆவடியில் இருந்து துணை ராணுவ படையினர் 500 பேர் புதுவைக்கு வரவழைக்கப்பட்டனர்.

காலை 6.30 மணிக்கு நேராக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். அங்கிருந்து ஒரு குழுவினர் காலை 7 மணிக்கு கவர்னர் மாளிகை முன்பு வந்தனர். அங்கு ஒரு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகளை அகற்றினர். பின்னர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே செல்லும் வழியில் இருபுறமும் பாதுகாப்பு அரண் போல நின்றனர்.

இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் இருந்து காலை 7.40 மணிக்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் கவர்னர் கிரண்பெடி காரில் வெளியே வந்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றார். பின்னர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வருகிற 20-ந் தேதி அதாவது ஒருவாரத்துக்குப் பின் மீண்டும் புதுவைக்கு திரும்பி வர கவர்னர் கிரண்பெடி திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே கவர்னர் மாளிகை அருகே காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நேற்று காலை முதல் கூட்டம், கூட்டமாக வந்து குவிந்தனர். ஆனால் சிறிது தூரத்துக்கு முன் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ‘கவர்னர் கிரண்பெடியே வெளியேறு, கிரண்பெடியே வெளியேறு’ என்று கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது சிலர் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை பார்த்த முதல்-அமைச்சர் நாராயணசாமி போராட்டக் களத்தில் இருந்து எழுந்து சென்று தொண்டர்களை சமாதானப்படுத்தினார். மகளிர் காங்கிரசார் கவர்னர் மாளிகையை சுற்றி தொடர்ந்து சங்கு ஊதியும், மேளம் அடித்தும், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விடிய விடிய போராட்டம் நீடித்தது. அப்போது முதல் அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், 39 மக்கள் பிரச்சினைகளையும் ஏற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

போராட்டம் நடத்தி வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமியை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேரள முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன்சாண்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா எம்.பி., காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் முகுல் வாஷ்னிக் ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.