
நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர
வாய்ப்பு உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் அருகே அரூரில் இன்று இரவு, அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள்
விழா நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
இந்த ஆட்சி 10 நாட்கள் தான் தாங்கும் என கூறினார்கள், ஆனால் 3வது
ஆண்டாக அரசு தொடர்ந்து வருகிறது. அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை
திமுக எதிர்க்கும். மக்களுக்கு பொங்கல் பரிசு அளித்ததை கூட திமுக
விமர்சித்தது. மக்கள் துணையோடு திமுக எதிர்ப்புகள் முறியடிக்கப்படும்.
தமிழகம் உபரி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக
செயல்படுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் மக்கள் மின்சாரம் இன்றி எப்படி கஷ்டப்பட்டனர் என்பது
மறக்கவில்லை.
நில அபகரிப்பில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதற்காக தனியாக சட்டமே
கொண்டுவந்தார் ஜெயலலிதா. அவர்களிடம் மீண்டும் ஆட்சி போனால் மக்களால்
நிம்மதியாக வாழ முடியாது.
மக்களின் எண்ணப்படிதான் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. விவசாயிகளின்
பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்த்து வருகிறோம். லோக்சபா
தேர்தலுடன் சேர்த்து 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற
வாய்ப்பு உள்ளது. எனவே அதிமுகவினர் இடைத் தேர்தலுக்கும் தயாராக இருக்க
வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகம் டெபாசிட்டை இழந்து தோல்வியடையும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி பேசினார். இடைத் தேர்தல் பற்றி தேர்தல் ஆணையம் இன்னும்
அறிவிக்காத நிலையில், முதல்வர் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிக்கு ஆதரவாக இருப்போம்
என ஏற்கனவே பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள், கூட்டணி ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment