
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பற்றி செய்தி வெளியிட்ட
பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம்
மறுத்துவிட்டது. இதையடுத்து கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வாரம்
இரு முறை வெளிவரும் செய்தி இதழான நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால்
இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் மாதம் வெளியான நக்கீரன் இதழில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து அட்டைப்படக் கட்டுரை ஒன்று வெளியானது.
அந்தக்
கட்டுரையில், கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லத் தூண்டியதான
குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா
தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையின் தொடர்பு குறித்துப்
பேசப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில்
புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் காவல்துறை
வழக்குப் பதிவுசெய்தது.
இந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று புனேவுக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு கோபால் வந்தார்.
அப்போது
அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கைதுசெய்வதாகத் தெரிவித்தனர்.
இதற்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு கோபால்
கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கோபால் கைது
செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து, அவரைச் சந்திக்க
வேண்டுமெனக் கூறினார்.
ஆனால், அதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவர் காவல் நிலையம் முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து வைகோவும் அவருடன் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்குப்
பிறகு, திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை
செய்யப்பட்ட கோபால், பிறகு 13ஆம் எண் பெருநகர நீதிமன்ற நடுவர் கோபிநாத்
முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆளுநரின் பணிகளைச் செய்யவிடாமல்
தடுத்ததாகக் கூறி, அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 124வது பிரிவின்
கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவரை நீதிமன்றக் காவலில்
சிறையில் அடைக்க வேண்டுமென்றும் காவல்துறை தரப்பில் கோரப்பட்டது.
ஆனால்,
கோபால் தரப்பில் ஆஜரபான வழக்கறிஞர் பி.டி. பெருமாள், 124வது பிரிவின் கீழ்
கோபாலை கைது செய்தது செல்லாது என வாதிட்டார். கோபால் ஆளுநரின் பணிகளை எந்த
விதத்திலும் தடைசெய்யவில்லை. அவரை அச்சுறுத்தவில்லை. உடல் ரீதியாகத்
தாக்கவில்லை, கட்டுப்படுத்தவில்லை. நேரில் சந்தித்ததுமில்லை.
இப்படியிருக்கும்போது ஆளுநரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக எப்படி வழக்குத்
தொடுக்க முடியுமென கோபால் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய என். ராம்
இதற்கிடையில்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் ஆகியோரும்
நீதிமன்றத்திற்கு வந்தனர். சிறிது நேரத்தில் இந்து குழுமத்தின் தலைவர் என்.
ராம் நீதிமன்றத்திற்கு வந்தார்.
அவரைப் பார்த்த நீதிபதி, இந்த
விவகாரம் குறித்து நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார்.
'இது முழுக்க முழுக்க கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான விஷயம். ஊடகங்கள்
மீது 124வது பிரிவின் கீழ் இதுவரை வழக்குத் தொடுக்கப்படவில்லை. இதை
அனுமதித்தால், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக மோசமான
முன்னுதாரணமாகிவிடும்' என்று ராம் கூறினார்.
இதைக்
கேட்ட நீதிபதி, நக்கீரன் இதழில் வந்திருந்த ஒரு படத்தைக் காண்பித்து, இது
மாதிரி ஒரு படத்தை வெளியிடுவதை நீங்கள் ஏற்கிறீர்களா என்று கேட்டார். "நான்
ஆசிரியராக இருந்தால் அப்படிச் செய்ய மாட்டேன். ஆனால் பிற பத்திரிகைகள்
செய்கின்றன. அப்படிச் செய்வது பரவலாக இருக்கிறது" என்று கூறினார் ராம்.
இதற்குப்
பிறகு, இது தொடர்பான தன்னுடைய உத்தரவை ஒத்திவைப்பதாக நீதிமன்ற நடுவர்
தெரிவித்தார். பிறகு மாலை நான்கரை மணியளவில் உத்தரவை வழங்கிய நீதிபதி,
கோபாலை காவலில் அனுப்ப முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து
கோபால் காவலில் இருந்து விடுதலையானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
நக்கீரன் கோபால், "நாங்கள் வெளியிட்ட செய்தியில் ஆட்சேபணை
தெரிவித்திருக்கலாம். அல்லது வேறு விதமாக இதை எதிர்கொண்டிருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் கொலைக் குற்றவாளியைக் கைது செய்வதுபோல கைது
செய்தார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நீதிமன்றங்கள் இருப்பது
பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.
நக்கீரன்
கோபால் கைது செய்யப்பட்டதற்கு, பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும்
கண்டனங்களைத் தெரிவித்திருந்தன. காலையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம்
முன்பு தர்ணா செய்ததற்காகக் கைது செய்யப்பட்ட வைகோ, மாலையில்
விடுவிக்கப்பட்டார்.
கோபால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம், அல்லிகுளம் நீதிமன்ற நடுவர் நீதிமன்றம்
ஆகியவற்றில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கைதுசெய்யப்பட்டிருந்த நக்கீரன் கோபாலையும் வைகோவையும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட வைகோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment