
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி
மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம்
செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை,
இந்திய கூட்டாளி நிறுவனமாக டசால்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதில்
கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ்
கட்சி, ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் முறைகேடு
நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த
மாதம் பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரான்ஸ் அதிபர்
ஹாலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய கூட்டாளி நிறுவனமாக ரிலையன்ஸ்
நிறுவனத்தை சேர்ப்பதை தவிர வேறு எந்த வாய்ப்பையும் இந்தியா எங்களுக்கு
வழங்கவில்லை எனக்கூறினார்.
ஆனால் இந்த
ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும், ரிலையன்ஸ் நிறுவனத்தை
டசால்ட் நிறுவனம் தேர்வு செய்ததில் தங்களின் தலையீடு இல்லை என்றும் மத்திய
அரசு கூறியது.
இந்த நிலையில், ‘ரபேல் ஒப்பந்தத்தை
பெற வேண்டுமென்றால் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்வது கட்டாயமும்,
அவசியமும் ஆகும்’ என டசால்ட் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி லோய்க்
சிகாலன் சக ஊழியர்களிடம் கூறியதாக, பிரெஞ்சு புலனாய்வு செய்தி இணையதளமான
‘மீடியாபார்ட்’ செய்தி வெளியிட்டு உள்ளது. இது மத்திய அரசுக்கு மேலும்
நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக
கூறும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு ஆதாரம்
சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ரபேல்
போர் விமான ஒப்பந்தம் மிகப்பெரிய ஊழல் ஆகும். எனவே இதுபற்றி விசாரிக்க
நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ்
தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா டெல்லியில் பேசுகையில், உதிரிபாகங்கள்
தயாரிக்கும் பணியை எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார்
நிறுவனத்துக்கு ஏன் வழங்கப்பட்டது என்பதை பிரதமர் மோடி மட்டுமே அறிவார்.
ஏனென்றால் இது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனால், இதில் என்ன செய்யப்
போகிறோம் என்பது அவர் மட்டுமே அறிந்த விஷயம். இவ்விவகாரம் தொடர்பாக
பிரதமர் மோடி பேச வேண்டும். தனது அரசை மிக உயர்வாக கூறிக் கொள்ளும் மோடி
இந்த விஷயம் பற்றி பேசுவதற்கு மவுனம் சாதிக்கிறார்.
ரபேல்
போர் விமான ஒப்பந்த விவரங்களை பிரதமர் மோடி மறைக்கிறார். அவருடைய மவுனம்
பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் பிரதமர்தான்
முழுவதும் தொடர்புடையவர். தனிப்பட்ட முறையிலும் அவர்தான் இதற்கு
பொறுப்பானவர் என்று கூறியுள்ளார். மேலும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் செய்து டசால்ட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து
பேசியது, ஏன்? என்பதை விளக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment