சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்
கலந்து கொண்ட இயக்குநர் கவுதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில்
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல்
10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.
காவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக
குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி
போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம்
வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர்.
இதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென
கைது செய்தனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரை தரதரவென
போலீஸார் இழுத்து சென்றதாக அவரது மனைவி மல்லிகா கூறியுள்ளார்.
அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது
செய்த போலீஸார் கவுதமனை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்து
செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக
குரல் கொடுத்த மன்சூர் அலிகான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வரும்
சமூகத் தலைவர்களை போராளிகளை போலீஸார் கைது செய்து வருவது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment