பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்
வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக
மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டத்தால்
விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும்,
கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு
தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் விளைவாக விவசாயிகளும் கைது
செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைளை
வெளியிட்டு வருகின்றனர். ஆயினும் சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை
கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர்
மும்முரமாக மேற்கொண்டு உள்ளனர். விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம
மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும், பல்வேறு அம்சங்களையும்
கருத்தில் கொண்டு இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான
நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வனம்- சுற்றுச்சூழல் துறை
அமைச்சகம் சார்பாக சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம்
ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், பசுமை வழி சாலைக்கு
வனம்-சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையையும் தாக்கல்
செய்வதுடன், அதன் அடிப்படையில் வனம்- சுற்றுச்சூழல் பாதிப்புகள்
தொடர்பாகவும் ஆய்வுகள் மேற் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பசுமை வழி சாலை தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் கருத்துக்கள்
கேட்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் எந்த வகையில் பிரச்சினைகள்
எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டுள்ளது.
பொதுமக்களின் பிரச்சனைகளை, கருத்துக்களை கேட்டபிறகே, சுற்றுச்சூழல் அனுமதி
வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுசூழல்
பாதிப்பு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு நிர்வாக திட்டம் தொடர்பாக
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்து
அதனையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என அந்த கடிதத்தில்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களிடமிருந்து
எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அவர்களின் கருத்து கேட்ட பின்பே
நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதால் இவ்விவகாரம்
தொடர்பாக விவசாயிகளுக்கு சாதகமான சூழ்நிலை அமையும் என்றே எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment