Latest News

என் பையன விடுங்க, நான் செத்துடுவேன்' காலைப் பிடித்து கதறிய தாய்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சி இன்றும் நடைபெற்று வருகிறது. 144 தடை உத்தரவு போடப்பட்டு விட்டது, துப்பாக்கியால் சுடுவோம் என்று காவலர்கள் கூறியும் அங்கு போராட்டமும், கலவரமும் வெடிக்கிறது. அந்த அளவிற்கு தூத்துக்குடியில் மக்கள் விரக்தியில் உள்ளனர். நேற்றைய போராட்டத்தின் போது வன்முறை வெடிக்க, காவல்துறையினரால் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இன்றும் தொடர்வதால் அங்கு ஊரே அதிர்ந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. மக்கள் வெளியே வரமுடியாத நிலையில் வீடுகளுக்குள்ளாகவே முடங்கியிருக்கிறார்கள்.
நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் உறவினர்கள் இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் விரட்டி கலைத்தனர். காலை 10.30 அளவில் மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் வந்தார். இதையறிந்து உறவினர்களும், பொதுமக்களும் முழக்கங்களை எழுப்பினர். ஆட்சியர் வந்த தகவல் அறிந்து அங்கு பெருமளவில் கூட்டம் குவியத் தொடங்கியது.
அந்த நேரத்தில் அங்கிருந்த பூங்காவில் இருந்தபடி காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன. அவர்களை காவல்துறையினர் விரட்டினர். இருதரப்புக்கும் மோதல் மூண்ட சூழலில், அங்கு கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்தன. பகல் 12 மணி அளவில் தொடங்கிய கல்வீச்சு சம்பவங்கள் பிற்பகல் 3 மணிவரை தொடர்ந்தது. மேலும் காவல்துறை வாகனம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் 2 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே கல்வீச்சு சம்பவத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அண்ணாநகர் பகுதியில் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் மீண்டும் பதட்டம் தொற்றியது. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தொடர் ரோந்து மற்றும் சோதனைப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு பலரையும் காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் காலில் விழுந்து தன் மகனை விட்டுவிடுங்கள் என தாய் ஒருவர் கதறும் காட்சிகள், பார்ப்பவர்களின் நெஞ்சை உருகச்செய்துள்ளது.
அந்தத் தாயார், “ஐயா. என் பையன விடுங்கய்யா. பெரிய ஐயா என பையன விடுங்க. நான் அழுதே செத்துடுவேன். என் பையன் வேலை பாக்குறான்யா. படித்து கோயம்பத்தூர் போகப்போறான்யா. எனக்கு இருக்குறது 2 மகன்தான். இரண்டு பேரையும் ராத்திரி வந்து தூக்கிட்டு போய்டீங்களே. விட்டுறங்க ஐயா” என காவல்துறையினரின் காலில் விழுந்து கதறுகிறார். அந்தக் காட்சியை பார்க்கவே பதட்டமாக உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.