திருவள்ளூர் அருகே குழந்தைக் கடத்தும் நபர் என நினைத்து மன நோயாளி ஒருவரை பொதுமக்கள் கொன்று தொங்கவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர்
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை கடத்தும் கும்பல்
ஊடுருவியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்துள்ளது. இது
திருவள்ளூர் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ள
தகவலாக இருக்கிறது.
நேற்று கூட திருவண்ணாமலை அருகே சென்னையில் இருந்து குலதெய்வம் கோயிலுக்கு
சென்ற குடும்பத்தினரை, குழந்தை கடத்த வந்த கும்பலாக நினைத்து பொதுமக்கள்
தாக்கியதில், மூதாட்டி ஒருவர் பலியானர்.
இதுபோன்ற
தாக்குதல் சம்பவங்கள் தற்போது திருவள்ளூரிலும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக புதிய நபர்கள், திருநங்கைகள், வட மாநிலத்தவர்கள் மீது
தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்தான் திருவள்ளூர் அருகே உள்ள
பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மன நோயாளி ஒருவர் மீது
பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர்
பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தை கைப்பற்றிய மக்கள், உப்பு நீர்
ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேலிருந்து கயிற்றால் கட்டி
தொங்க விட்டுள்ளனர்.
இது
குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, சம்பவ
இடத்திற்கு வந்து மன நோயாளியின் சடலத்தை காவலர்கள் மீட்டு, பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கூறும் அப்பகுதி மக்கள் சிலர்,
அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை எனவும், கடந்த சில மாதங்களாக மனநிலை
பாதித்து சுற்றி திரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் சமூக
வலைத்தளங்களில் பரவிய தகவல்களின் தாக்கத்தால் அவரை மக்கள் சிந்திக்காமல்
அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர். மக்களுக்கு யார் மீதாவது
சந்தேகம் ஏற்பட்டால் அவரை அடிக்க வேண்டாம் எனவும், காவல்துறையிடம்
கூறுமாறும் காவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment