Latest News

மதுரை: போதிய வினாத்தாள் இல்லாததால் 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய நீட் தேர்வு நிறைவு

மதுரை நரிமேடு தனியார் பள்ளியில் போதிய வினாத்தாள் இல்லாததால் 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய நீட் தேர்வு நிறைவு பெற்றுள்ளது. 

மருத்துவம் மற்று பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 255 மையங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில் 5 ஆயிரத்து 800 மாணவர்கள் எர்ணாகுளம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் தேர்வு எழுதினர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 3 ஆயிரத்து 500 மாணவர்கள் தேர்வெழுதச் சென்றதால் நெல்லையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

தமிழகத்தில் உள்ள 170 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கிய நீட்தேர்வு பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது. வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் கேள்விகள் எளிதாக இருந்ததாக கூறிய மாணவர்கள், இயற்பியல் பாட கேள்விகள் சி.பி.எஸ்.இ. தரத்தில் இருந்ததால் கடினமாக இருந்தது என கூறினர்.

இதனிடையே சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் வழி மாணவர்களுக்கு ஹிந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் தேர்வு தாமதமாக தொடங்கியது. 

மதுரை நரிமேடு நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் வகையில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 120 தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு ஆங்கிலம் கேள்வித்தாளுக்கு பதிலாக ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களை வழங்கி, மாணவர்களை தேர்வு எழுதச் சொல்லி நோகடித்துள்ளனர் தேர்வுத்துறையினர். தேர்வறையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கெடுபிடியால் பதற்றத்தில் இருந்த மாணவர்கள் இதைப்பற்றி தேர்வுக்கூட மேற்பார்வையாளர்களிடம் சொல்லவே பயந்த மாணவர்கள், பின்னர் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். மேற்பார்வையாளர்களும் திரு திருவென்று விழிக்க, விஷயம் வெளியே தெரிந்துவிடாமல் பாதுகாத்தவர்கள் உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அதுவரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்வு அறையில் கவலையுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

மதியம் தேர்வு எழுதிவிட்டு மற்ற மாணவர்கள் வந்த பின்புதான் இந்த தகவல் வெளியில் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆங்கில கேள்வித்தாளுக்கு பதிலாக ஹிந்தியில் வினாத்தாள்களை மாற்றி வழங்கி குளறுபடி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏதோ குளறுபடி நடந்துவிட்டது என்று தேர்வுத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் எதிர்ப்புகளை அடுத்து மாற்று வினாத்தாள்களுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மாணவர்கள் வளாகத்திலேயே அமர வைக்கப்பட்டனர். மதிய உணவும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், 96 மாணவர்கள் 5 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு ஆங்கில கேள்வித்தாள்களை வழங்கி தொடங்கிய தேர்வு தற்போது நிறைவு பெற்றுள்ள கொடுமை நடைபெற்றுள்ளது. 

இதே போன்று சேலம் மெய்யனூர் வித்யாமந்திர் பள்ளியில் தமிழ் வாயிலாக தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஹிந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் தாமதமாக தேர்வு நடைபெற்றது. இந்த மையத்திற்கு சென்ற 780 பேரில் 190 தமிழ் மீடியம் மாணவர்களுக்கு ஹிந்தி வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாற்று வினாத்தாள் வரவழைக்கப்பட்டு 12.30 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை சரியாக வரச்சொன்ன சி.பி.எஸ்.சி. தேர்வுத்துறை, சரியான கேள்வித்தாளை வழங்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக பெற்றோர்கள் ஆவேசமாக பேசினர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.