அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம்
ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி
மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர்
டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
சில மாதங்கள் முன்பு வரை கடுமையான
சொற்போரில் ஈடுபட்டு வந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும், அடுத்தடுத்து
எதிர்பாராத விதமாக நடந்த நேர்மறையான நிகழ்வுகள், மற்றும் ராஜீய
முயற்சிகளின் விளைவாக தற்போது பேச்சுவார்த்தை வரை வந்துள்ளார்கள்.
ஏப்ரல் மாதம் முதல் முறையாக, கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை ஏற்று உலகை அதிர வைத்தார் டிரம்ப்.
சமீப
வாரங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்
பாம்பியோ புதன்கிழமை வடகொரியா சென்று திரும்பினார்.
அவரது பயணத்தின்போது வடகொரியாவின் சிறையில் இருந்த மூன்று அமெரிக்கக்
குடிமக்களை அந்நாடு நல்லெண்ண நடவடிக்கையாக விடுவித்தது. அவர்கள் உடனடியாக
அமெரிக்கா திரும்பினர். அப்போது டிவிட்டர் மூலம் கருத்துத் தெரிவித்த
டிரம்ப், கிம்- பாம்பியோ இடையே நடந்த சந்திப்பு நல்லவிதமாக இருந்ததாகவும்,
உச்சி மாநாட்டுக்கான தேதியும், இடமும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும்
தெரிவித்தார்.
இந்நிலையில் அடுத்த நாளே டிரம்ப்-கிம் சந்திப்புக்கான
தேதியும், இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து
விடுவிக்கப்பட்ட அந்த மூன்று பேரும் அமெரிக்கா வந்தடைந்த சில மணி
நேரங்களில் இந்தத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏன்?
சிங்கப்பூருக்கும்
அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருக்கிறது. அதே நேரம்
சிங்கப்பூர்-வட கொரியா இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் உள்ளன.
ஆனால், வடகொரியா அடுத்தடுத்து நடத்திய அணு ஆயுத மற்றும் ஏவுகணைச்
சோதனைகளைத் தொடர்ந்து சர்வதேசத் தடைகள் கடுமையானபின், வடகொரியாவுடனான எல்லா
வர்த்தக உறவுகளையும் சிங்கப்பூர் துண்டித்துக்கொண்டது.
உயர்மட்ட
ராஜீய நிகழ்வுகளை நடத்துவதற்கு சிங்கப்பூர் அவ்வப்போது
தேர்ந்தெடுக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு, சீனா மற்றும் தைவான் நாடுகளின்
தலைவர்கள் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்துப் பேசிய நிகழ்வும்
சிங்கப்பூரில்தான் நடந்தது.
தொடர்
No comments:
Post a Comment